கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் 'ஜகமே தந்திரம்'. இந்தப் படம் இம்மாதம் 18ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது. அண்மையில் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சியை வெளியிட்டபோது இணையக் கலந்துரையாடலில் தனுஷ், "எனக்கு சுருளி கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவேண்டும் என்று நான் கார்த்திக் சுப்புராஜிடம் கேட்டிருக்கிறேன். என் ரசிகர்களுக்கும் சினிமா ரசிகர்களுக்கும் இந்தப் படம் கட்டாயம் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
"நானும் கார்த்திக் சுப்புராஜுவும் ரஜினி சாரின் மிகப் பெரிய ரசிகர்கள். என் நடிப்பில் அவரின் தாக்கம் இருந்து விடக்கூடாது என்பதில் இத்தனை ஆண்டுகளாக கவனமாக இருந்தேன். ஆனால் 'ஜகமே தந்திரம்' படத்தில் ரஜினி சார் இருக்கட்டும் என்று கார்த்திக் சொன்னார். அதனால் சுருளியிடம் ரஜினி சாரை பார்க்க முடியும். இந்தப் படம் நல்ல சூழலில் வெளியாகி இருக்கலாம். இருப்பினும் இதுபோன்ற கடினமான நேரத்தில் வீடுகளில் அடைந்திருக்கும் மக்களை மகிழ்விக்க வருகிறது என்பதில் எனக்கு சந்தோஷம்", என்றார்.

