'எனக்கு நண்பர்கள் அதிகமில்லை'
எந்தவித கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்பதை கொள்கையாகவே வைத்துள்ளாராம் நிக்கி கல்ராணி.
திரையுலகிலும் அதற்கு வெளியிலும்கூட தமக்கு அதிக நண்பர்கள் இல்லை என்றும் அதனால்தான் தம்மைப் பற்றி எந்தவிதமான கிசுகிசுக்களும் வருவதில்லை என்றும் சொல்கிறார்.
"பொதுவாக படப்பிடிப்பு, அது முடிந்தால் வீடு என்றுதான் இருப்பேன். கூடுமானவரை குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவிடுவதுதான் எனக்குப் பிடிக்கும். இல்லையெனில் நான் வளர்க்கும் செல்லப் பிராணிகளுடன் விளையாடுவேன்.
"பெண்கள் பள்ளி, பெண்கள் கல்லூரி என்று படித்ததால் எனது நட்பு வட்டத்தில் ஆண்களுக்கு இடமே இல்லை. திரையுலகம் சார்ந்த விருந்து நிகழ்ச்சிகளில்கூட என்னைப் பார்க்க முடியாது. அப்படி இருக்கும்போது என்னைப் பற்றி எப்படி கிசுகிசுக்கள் வரும்?" என்று கேட்டுச் சிரிக்கிறார் நிக்கி.
'பள்ளியில் படிக்கும்போதே நடித்தேன்'
பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும்போதே விளம்பரப் படத்தில் நடித்துள்ளாராம் நடிகை ரெஜினா.
பள்ளி நிகழ்ச்சியில் இவர் தேவதை போன்று வேடமிட்டு நடித்ததைப் பார்த்த விளம்பரப் பட இயக்குநர் உடனடியாக தனது விளம்பரத்தில் நடிக்க வைத்துள்ளார்.
"தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்தி ருக்கிறேன். 'கண்ட நாள் முதல்' படத்தில் நடித்தபோது எனக்கு 14 வயது. அதன்பிறகு பட்டப்படிப்பில் கவனம் செலுத்தினேன். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது கன்னடப் பட வாய்ப்பு கிடைத்தது. பிறகு குறும்படம் ஒன்றில் நடித்தேன். அதன்பிறகு தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடிக்கக் கிடைத்த தொடர் வாய்ப்புகளால் முழுநேர நடிகையாகி விட்டேன்," என்று தான் கடந்து வந்த பாதை குறித்து அண்மைய பேட்டியில் விவரித்துள்ளார் ரெஜினா.
'ஆராய்ச்சியில் பங்கேற்பேன்'
நோய்கள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே தமது லட்சியம், கனவு என்கிறார் நடிகை சாய் பல்லவி.
தானும் ஒரு மருத்துவர் என்ற முறையில் இது தொடர்பான ஆராய்ச்சியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என விரும்புகிறாராம்.
"மனிதர்களுக்கு நோய் வந்த பிறகு சிகிச்சை அளித்து குணப்படுத்தும் வழக்கமான மருத்துவராக இருப்பதைவிட, ஒருவருக்கு நோய் ஏன் வருகிறது, அது வராமல் இருக்க என்ன செய்யலாம் என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதை நோக்கிதான் எனது பயணம் இருக்கும். மக்களுக்கு மருத்துவச் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன்தான் ஜார்ஜியா வரை சென்று மருத்துவம் படித்தேன். அந்தப் படிப்பை வீணாக்கமாட்டேன்," என்கிறார் சாய் பல்லவி.
ராஷி: கவர்ச்சியாக நடிக்கவும் தயார்
ஒரு நடிகை என்றால் அனைத்து விதமான, சவாலான கதாபாத்திரங்களிலும் நடிக்கவேண்டும். அது அவர்களின் கடமை என்கிறார் நடிகை ராஷி கண்ணா.
அந்த வகையில் கதைக்குத் தேவை என்றால் ஓரளவு கவர்ச்சியாக நடிக்கவும் தாம் தயாராக இருப்பதாக சொல்கிறார்.

