இந்த ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட இந்தியப் படங்கள், இணையத் தொடர்களின் பட்டியலில் 'மாஸ்டர்' முதலிடம் பிடித்துள்ளது.
ஐஎம்டிபி என்ற திரைப்பட மதிப்பீடு, தகவல்தளம் இந்திய அளவில் வெளியான திரைப்படங்களைக் கொண்டு ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து ஜனவரி மாதம் வெளியான 'மாஸ்டர்' முதலிடத்தைப் பிடித்துள்ளது. 'ஆஸ்பிரண்ட்ஸ்' எனும் இணையத் தொடர் இரண்டாம் இடத்தையும் பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான 'தி வைடு டைகர்' படம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
மலையாளத்தில் மோகன்லால் நாயகனாக நடித்து வெளியான 'த்ரிஷ்யம்' படம் நான்காம் இடத்தையும் தமன்னா நடித்துள்ள 'நவம்பர் ஸ்டோரிஸ்' இணையத் தொடர் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளன.
தனுஷின் 'கர்ணன்', தெலுங்குப் படம் 'வக்கீல் சாப்', 'மகாராணி' இணையத் தொடர், 'கிராக்' தெலுங்குப் படம், 'தி கிரேட் இண்டியன் கிச்சன்' ஆகியவை 6 முதல் 10 வரையிலான இடங்களைப் பிடித்துள்ளன. 'மாஸ்டர்' படத்தைப் பொறுத்தவரை வசூலிலும் அசத்தி உள்ளது. உலகளவில் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் கண்ட படங்களின் பட்டியலிலும் அது இடம்பிடித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இத்தகவலைப் பரப்பி வருகின்றனர்.

