'கோப்ரா' படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.
வித்தியாசமான ஒப்பனையுடன் பட நாயகன் விக்ரம் காட்சியளிக்கும் அந்தப் படம் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
அதில், ஒப்பனை அறையில் உள்ள கண்ணாடி முன் அமர்ந்திருக்கிறார் விக்ரம். அவரது முகத்தில் பாதியளவு மட்டும் ஒப்பனை போடப்பட்டிருக்கிறது.
இந்த ஒப்பனைக்கான பின்னணி என்னவென்று தெரியாவிட்டாலும், விக்ரமின் இந்த தோற்றம் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது.
"இயல்பு வாழ்க்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். மீண்டும் பணிகளைத் தொடங்குவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்," என்று சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அஜய் ஞானமுத்து.
இந்த ஆண்டு இறுதிக்குள் 'கோப்ரா' வெளியீடு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் பல்வேறு தோற்றங்களில் விக்ரம் நடித்திருப்பதாகத் தகவல்.

