, :
கவின்
தாம் கடந்துவந்த பாதையை அவ்வப்போது நினைத்துப் பார்த்து, இன்று தாம் எட்டியுள்ள உயரத்தை அதனுடன் ஒப்பிட்டுப் பெருமிதம் அடைவதாகச் சொல்கிறார் 'பிக்பாஸ்' கவின்.
தற்போது இவரது நடிப்பில் உருவாகி உள்ள படம் லிஃப்ட். இப்படத்தின் விளம்பரத்துக்கு சிவகார்த்திகேயன் உதவி செய்தாராம்.
"இதற்காக சிவா அண்ணாவுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்," என்கிறார் கவின்.
'லிஃப்ட்' படப்பிடிப்பின்போது தாம் எதிர்கொண்ட சவால்களையும் எந்தளவுக்குக் கடுமையாக உழைக்கவேண்டி இருந்தது என்பதையும் அவர் அண்மைய பேட்டியில் விவரித்துள்ளார்.
ஒரு முக்கியமான பாடல் காட்சியைப் படமாக்கத் திட்டமிட்டோம். அந்தப் பாடலைப் பாடி இருப்பது சிவா அண்ணா. அதனால்தான் அது முக்கியத்துவம் பெறுகிறது.
"தொடக்கத்தில் இதை ஒரு பயணப்பாடல் போல் சித்திரிக்கவே முடிவு செய்திருந்தோம். ஆனால், ஊரடங்கு காரணமாக அது சாத்தியமாகவில்லை.
"எனவே, பெரிய வணிக வளாகம் ஒன்றில் இளையர் கூட்டம் இப்பாடலைப் பாடி ஆடுவது போல் திட்டத்தை மாற்றி அமைத்தோம். சென்னையில் உள்ள மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரம்மாண்ட அலுவலகத்தில் காட்சி படமாக்கப்பட்டது. ஊரடங்கு என்பதால் அந்த அலுவலகத்தில் யாருமே இல்லை.
"கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் ஒத்திகை பார்த்து படப்பிடிப்பை நடத்தினார் இயக்குநர். ஒரே நாளில் முழு பாடலையும் படமாக்குவது மிகக் கடினமான பணி. மொத்த படக்குழுவும் முழு வீச்சில் களமிறங்கிய நிலையில் திடீரென மின்தடை ஏற்பட்டது. அங்குள்ள அனைத்து 'ஏசி' இயந்திரங்கள், விளக்குகள் ஆகியவற்றை மொத்தமாக இயக்கப் போதுமான சக்தி கொண்ட ஜெனரேட்டர்கள் இல்லை.
"அதனால் 40 நடனக் கலைஞர்களும் தொழில்நுட்பக் குழுவினர் 20 பேரும் வியர்க்க விறுவிறுக்க வேலை பார்த்தோம். சூரிய வெளிச்சம் உள்ளே வரக்கூடாது என்பதால் ஜன்னல்கள் உள்ளிட்ட அனைத்தையும் முன்பே அடைத்தாகி விட்டது.
"பாடல் காட்சியில் தொடர்ச்சி இருக்கவேண்டும் என்பதால் உடைகளையும் மாற்ற முடியாது. இதனால் உடலெங்கும் வியர்த்து வழிந்த நிலையில் இடைவிடாமல் 24 மணி நேரம் பாடல் காட்சியை எடுத்து முடித்தோம். இதுபோன்ற சவாலான அசௌகரியமான அனுபவம் இதற்கு முன் ஏற்பட்டதில்லை. எனினும் அந்தப் பாடல் காட்சி சிறப்பாக வந்துள்ளது," என்கிறார் கவின்.
சிவகார்த்திகேயன் பாடல் எப்படி உள்ளது?
"அவர் இந்தப் படத்தில் பாடியிருப்பது எங்களுக்குப் பெரும் பலம். இந்த ஒரு காரணத்துக்காகவே ரசிகர்கள் இந்தப் படம் குறித்துத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். சிவா அண்ணா நடிக்கும் 'டாக்டர்' படத்தில் நான் உதவி இயக்குநராகப் பணியாற்றி உள்ளேன். இதன்மூலம் அவரைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள முடிந்தது. 'லிஃப்ட்' பட விளம்பரப் பாடலுக்காக அவரை அணுகியபோது உற்சாகத்துடன் ஒப்புக் கொண்டார். அவரைப் போல் உதவி செய்யக் கூடியவர்களை பார்ப்பது அரிது," என்கிறார் கவின்.
'லிஃப்ட்' படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு அருகில்தான் இவர் பணியாற்றிய தொலைக்காட்சி நிறுவனம் உள்ளது. படப்பிடிப்புக்கு இடையே அந்தக் கட்டடத்தைப் பார்க்கும்போதெல்லாம் பழைய நினைவுகள் மனதில் தோன்றுமாம்.
"நான் கல்லூரிப் படிப்பை முடிக்கவில்லை. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளராகப் பணியாற்றி இருக்கிறேன். இன்று அப்படிப்பட்ட பெரிய நிறுவனங்களில் நடக்கும் படப்பிடிப்பில் ஒரு நடிகனாக, நாயகனாக நுழைந்துள்ளேன். நல்ல மரியாதையுடன் நடத்தப்படுகிறேன் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. பல சிரமங்களைக் கடந்து இந்த இடத்துக்கு வந்திருப்பதை நினைத்துப் பார்ப்பதும்கூட ஓர் அலாதியான அனுபவம்தான்," என்கிறார் கவின்.
இப்படத்தில் அம்ரிதா நாயகியாக நடித்துள்ளார். படத்தின் பெயருக்கேற்ப இதில் ஒரு மின்தூக்கி (லிஃப்ட்) முக்கியக் கதாபாத்திரம் போல் சித்திரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

