வித்தியாசமான கதைக்களம் என்றாலே வித்யாபாலன் பெயரைத்தான் இயக்குநர்கள் முதலில் பரிசீலிக்கிறார்கள். அந்த வகையில் தற்போது 'ஷெர்னி' என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார் வித்யா.
இதில் கண்டிப்புடன் செயல்படும் வன இலாகா அதிகாரியாக நடித்துள்ளாராம். மத்தியப் பிரதேசத்தில் உள்ள வனப்பகுதிதான் கதைக்களம். அமித் மசுர்கார் இயக்கி உள்ளார்.
முழுக் கதையையும் தனது தோளில் சுமந்துள்ளாராம் வித்யா. அவரது கதாபாத்திரத்தின் பெயர் வித்யா வின்சன்ட்.
"இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பல முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். இந்தப் படம் என் மனதில் பல்வேறு வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது," என்கிறார் வித்யா.
விலங்குகளும் மனிதர்களும் ஒருவரையொருவர் சம அளவில் சார்ந்துள்ளனர் என்றும் இதை ஒப்புக்கொள்வதுடன், இருதரப்புக்கும் இடையேயான இந்த உறவை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் கூறுகிறார்.
"உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை என்பதே எனது எண்ணமாக இருந்தது.
"வன வாழ்க்கை குறித்த எனது நிலைப்பாடும் அறிவும் இப்போது முற்றிலுமாக மாறிவிட்டது. மனிதர்களின் செயல்பாடுகளால் வனங்களும் வன வாழ்க்கையும் எந்தளவுக்குப் பாதிக்கப்படுகின்றன என்பது குறித்த புரிதல் இப்போது வந்துள்ளது," என்கிறார் வித்யா.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 'ஷெர்னி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஊரடங்கால் பணிகள் நிறுத்தப்பட்டு பின்பு அக்டோபர் மாதம் மீண்டும் இந்தப் படம் வளரத் தொடங்கியது.
வனப்பகுதிகளுக்கு மத்தியில் படப்பிடிப்பை நடத்துவதற்கு முன்பு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனராம். இருப்பினும் கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டி இருந்ததாம்.
"இதற்கு முன்பு பாதுகாக்கப்பட்ட பகுதியில் யானைகள் மீது ஏறி அமர்ந்து வன விலங்குகள் சுற்றித் திரிவதை நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்துக்காக வனத்தில் கூடாரம் அமைத்து தங்கியது வித்தியாசமான, அருமையான அனுபவமாக இருந்தது.
"ஓய்வு நேரத்தில் காட்டுப் பகுதியில் நீண்ட தூரம் நடந்து சென்றேன். நாங்கள் படப்பிடிப்பு நடத்தியபோது கோடை காலம் என்பதால் அவ்வளவு பசுமையாக இல்லை. எனினும் பாதுகாப்பாக உணர்ந்தேன்.
"இது இந்தி, இந்திய ரசிகர்களுக்காக மட்டுமே எடுக்கப்படும் படமல்ல, உலகம் முழுவதும் சென்று சேரவேண்டிய அம்சங்கள் இதில் உள்ளன. நேரடியாக இணையத்தில் இப்படம் வெளியாகும்.
"வீட்டில் இருந்தபடியே ஓர் அடர்ந்த வனப்பகுதியில் சுற்றி வந்த அனுபவம் ரசிகர்களுக்குக் கிடைக்கும்.
"இன்றுள்ள கொரோனா நெருக்கடி காலத்தில் இப்படியொரு வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைப்பது என்னைப் பொறுத்தவரை பெரிய விஷயம். எனவே, மறக்காமல் இப்படத்தைப் பாருங்கள்," என்கிறார் வித்யாபாலன்.
இந்தப் படம் பிறமொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட இருப்பதாகத் தகவல். படத்தின் முன்னோட்ட காட்சித் தொகுப்புக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
"உலகமே நெருக்கடியில் உள்ள வேளையில் நான் நடித்த இரண்டு படங்கள் நேரடியாக இணையத்தில் வெளியாகும் வாய்ப்புக் கிடைத்தது எனது அதிர்ஷ்டம்.
"இதற்கு முன்பு இணையத்தில் வெளியான 'சகுந்தலாதேவி' ரசிகர்களால் பாராட்டப்பட்டது. அதேபோல் இந்தப் படமும் வெற்றி பெறும் என நம்புகிறேன்.
"திரையுலகில் அண்மைய காலமாக நிகழும் சில மாற்றங்களை நாம் நேர்மறையான கோணத்தில் பார்த்து வரவேற்க வேண்டும் எனக் கருதுகிறேன்.
"சில மாற்றங்களால் சிறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனினும் ஒப்பீட்டு அளவில் ஏராளமானோர் நல்ல பலனைப் பெறுகிறார்கள் என்பது உறுதியாகும்போது நாம் அதை வரவேற்க வேண்டும். இணையத்தில் நேரடியாக படத்தை வெளியிடுவது நல்ல மாற்று ஏற்பாடாக கருதப்பட வேண்டும்," என்று சொல்லும் வித்யாபாலன், நல்ல கதைகள் அமையும் பட்சத்தில் தமிழ்ப் படங்களிலும் நடிக்கத் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்.

