மனதில் கொரோனா தொற்று குறித்த பயம் இருந்தாலும் தன்னை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக 'தேங்க்யூ' என்ற தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.
அண்மையில் இந்தப் படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்து நாடு திரும்பியதும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டாராம்.
"நல்லவேளையாக தொற்று பாதிப்பு ஏதும் இல்லை. கொரோனாவுக்கு பயந்து எத்தனை நாட்கள்தான் வீட்டிலேயே பயந்து முடங்கிக் கிடக்க முடியும்.
"படப்பிடிப்பின்போது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நடந்து செல்லும்போது கூட சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தோம். 30 நாட்கள் படப்பிடிப்பு நடந்தபோது கூடுமானவரை உள்ளரங்குகளிலேயே காட்சிகள் எடுக்கப்பட்டன.
"ஒரே சமயத்தில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபடவில்லை. இப்படி முன்னெச்சரிக்கையுடன் கவனமாகவும் திட்டமிட்டும் செயல்பட்டால் பயமில்லாமல் பணியாற்ற முடியும். படப்பணிகள் பாதிக்காமல் இருந்தால் சினிமா தொழிலாளர்களின் பிரச்சினைகள் ஓரளவேனும் குறையும்," என்கிறார் ராஷி கண்ணா.

