ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு சொந்த நாடான இங்கிலாந்தில் அமைதியாக வசித்து வருகிறார் ஏமி ஜாக்சன்.
கொரோனா நெருக்கடி காரணமாக இந்தியா பக்கம் வரமுடியவில்லை என்ற வருத்தம் உள்ளதாம். எனினும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தி, தமிழ், தெலுங்குப் படங்களைப் பார்த்து ரசித்து வருவதாகச் சொல்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஏமி, இப்போது முழுநேரக் குடும்பத் தலைவி ஆகிவிட்டாராம். எனினும் இணையத் தொடர்களில் நடிக்கக் கேட்டு சிலர் அணுகியுள்ளதாகச் சொல்கிறார்.
"இப்போதைக்கு மீண்டும் நடிப்பது குறித்து எந்த முடிவும் செய்யவில்லை. சில கதைகளைக் கேட்டுள்ளேன். நடிப்பதா இல்லையா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்க வாய்ப்புண்டு," என்கிறார்.
16 வயதிலேயே மாடலிங் துறையில் ஜொலிக்கத் தொடங்கிய ஏமி, பிறகு இந்திப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தாலும்கூட இவர் தமிழில் வசனங்களை மனப்பாடம் செய்து கூடுமானவரை பிழையின்றி பேசியதை தமிழ்த் திரையுலகத்தினர் பலரும் பாராட்டினர்.
"இந்தக் காரணத்தால்தான் தமிழ் ரசிகர்கள் மனதில் எனக்கும் இடம் கிடைத்ததாக விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
"என்னைப் பொறுத்தவரை விளம்பரம் அல்லது திரைப்படங்கள் என எதுவாக இருந்தாலும் முழு அர்ப்பணிப்புடன் இருந்தால்தான் வெற்றி பெற முடியும்.
"ரஜினியுடன் '2.0' படத்தில் நடித்த பிறகு 'சூப்பர் கேர்ள்' என்ற இணையத் தொடரில் நடித்தேன். அதன்பிறகு குடும்பத்தலைவியாக பொறுப்புகள் அதிகரித்ததால் நடிக்க முடியவில்லை," என்கிறார் ஏமி ஜாக்சன்.
இப்போது அவர் வெறும் மாடல் அழகி, நடிகை மட்டுமல்ல, வழக்கறிஞராகவும் தேர்ச்சி பெற்றுள்ளார். இதுகுறித்த தகவலை இன்ஸ்டகிராமில் பதிவு செய்துள்ளார்.
ஏமி, செல்லப் பிராணிகளின் காதலி என்பது அவருடன் நெருக்கமாக உள்ளவர்களுக்குத் தெரியும். இதன் காரணமாகவே விலங்குகளைப் பாதுகாக்க தீவிரமாகச் செயல்படும் 'பீட்டா' அமைப்பின் தூதுவராக உள்ளார்.
பல ஆண்டுகளாக இந்தப் பணியில் ஈடுபட்டிருப்பதும் ஏராளமான விலங்குகளைக் காப்பாற்றியதும் மனிதநேயமுள்ள ஒரு பெண்ணாக தமக்கு மனநிறைவு அளிப்பதாகச் சொல்கிறார் ஏமி.
தற்போது தென்னாப்பிரிக்காவில் தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவது மிகுந்த வருத்தமளிப்பதாக கண்கலங்குகிறார்.
"அந்த யானைகளைப் பாதுகாக்க அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பான எனது உணர்வுகளை கவிதைகளாக வடித்துள்ளேன்," என்று சொல்லும் ஏமி, குழந்தைதான் தனது உலகம் என்பதை உணர்ந்துள்ளாராம்.
எங்கு சென்றாலும் தன் குழந்தையுடன்தான் செல்கிறார்.
"எனது மகனின் முழுப்பெயர் ஆன்ட்ரியாஸ் ஜாக்ஸ் பனயிடோ. சுருக்கமாக 'ஏஜிபி' என அழைப்போம். என் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்திருப்பது என் மகன்தான். எனக்கும் என் கணவருக்கும் வாழ்க்கையின் ஒளி என்றால் அது எங்கள் மகன்தான். அவனுக்கு சிறந்த முன்மாதிரியாகவும் நண்பர்
களாகவும் பாதுகாவலர்களாகவும் இருப்பதே எங்கள் லட்சியம்," என்று சொல்லும் ஏமி, பயணங்களையும் வெகுவாக நேசிப்பவர்.
ஒவ்வொரு பயணத்தின்போதும் பல ஆங்கில நாவல்களைப் படித்துவிடுவாராம்.
இப்போதும்கூட ஓய்வு நேரம் கிடைத்தால் புத்தகங்களில் மூழ்கிப் போவதாகச் சொல்கிறார்.
"புத்தகங்கள் தவிர, உடற்பயிற்சிதான் எனது அடுத்த விருப்பம். தாய்மை அடைந்தபோதுகூட நான் பல்வேறு உடற்பயிற்சிகளைச் செய்ததை சிலர் விமர்சித்தனர்.
"ஆனால், மருத்துவரின் ஆலோசனைப்படி நாம் உடற்பயிற்சி செய்வதில் தவறில்லை.
"இப்போதும்கூட உடற்பயிற்சியும் யோகாவும்தான் எனது உடல்நலனுக்கு காரணமாக உள்ளன," என்று சொல்லும் ஏமி ஜாக்சன், மீண்டும் இந்தியாவுக்கு வரவேண்டும், அங்கு சில மாதங்கள் தங்க வேண்டும் என விரும்புகிறாராம்.

