திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read

யோகியின் கிரிக்கெட் காணொளி

காற்பந்து, கிரிக்கெட் விளையாட்டுகளில் கெட்டிக்காரராம் யோகி பாபு. 'கோலமாவு கோகிலா' படத்தின் ஒரு காட்சியில் அவர் காற்பந்தை உதைப்பது மிக நேர்த்தியாக இருந்ததாக பலர் தெரிவித்திருந்தனர்.

தமக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் என்று அவரும் கூட சில பேட்டிகளில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தாம் கிரிக்கெட் விளையாடும் காணொளிப் பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் யோகி.

அதில் வேகமாக வீசப்படும் பந்தை மிக லாவகமாக கையில் உள்ள மட்டையால் அடித்து எல்லைக்கோட்டுக்குத் துரத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து ரசிகர்கள் பலர் அவரைப் பாராட்டி பின்னூட்டமிட்டுள்ளனர்.

தற்போது, 'அரண்மனை-3', 'கடைசி விவசாயி', 'டிக்கிலோனா' உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் இரண்டு படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு.

புகைப்படங்கள் வெளியிட்ட அம்ரிதா

குளியல் தொட்டியில் அமர்ந்திருப்பது போன்று நிறைய புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் 'பிகில்' படத்தில் நடித்த அம்ரிதா.

அவை கவர்ச்சியாக, ஆபாசமாக இல்லா விட்டாலும் இந்த இடத்தில் அமர்ந்தா புகைப்படங்கள் எடுப்பது என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு, "நல்ல புகைப்படங்களை எடுக்க இதுவும் சரியான இடம்தான்," என விளக்கம் அளித்துள்ளார் அம்ரிதா.

தற்போது தமிழில் 'பிக்பாஸ்' கவினுடன் 'லிஃப்ட்' படத்தில் நடித்து முடித்துள்ள இவருக்கு, தமிழிலும் தெலுங்கிலும் தலா இரண்டு படங்கள் கைவசம் உள்ளனவாம்.

"ரசிகர்களுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பில் இருக்கவேண்டும் என விரும்பினேன். அதனால்தான் இவ்வாறு புகைப்படங்களை எடுத்தேன். அவை நன்றாக இருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்," என்கிறார் அம்ரிதா.

கடும் காய்ச்சலுடன் நடித்த சாந்தனு

'முருங்கைகாய் சிப்ஸ்' படத்தில் நடித்து முடித்துள்ளார் இயக்குநர் பாக்யராஜ் மகன் சாந்தனு.

இதில் இடம்பெறும் பாடல் காட்சி ஒன்றை அண்மையில் படமாக்கி உள்ளனர். இதில் சாந்தனுவுடன் அதுல்யா ரவி இணைந்து நடனமாடி உள்ளார்.

படப்பிடிப்பின்போது சாந்தனுவுக்கு 101 டிகிரி காய்ச்சல் அடித்ததாம். இருந்தாலும் படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக காய்ச்சலுடன் நடித்தாராம்.

"என்னுடன் நடித்த அதுல்யா ரவி நன்றாக ஒத்துழைத்தார். கொரோனா காலத்தில் இந்த அளவு சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அதுல்யா செயல்பட்டது பெரிய விஷயம்.

"நெருக்கமான நடன அசைவுகளைக் கண்டு என் மனைவி கீர்த்தி ஏதாவது சொல்வார் என்று நினைத்தேன். அவரோ நானும் அதுல்யாவும் நன்றாக நடனமாடியதையும் காய்ச்சலுடன் நான் நடித்ததையும் பாராட்டினார். இந்தப் படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என நம்புகிறேன்," என்கிறார் சாந்தனு.