மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது தனக்கு உற்சாகம் அளித்தபோதிலும், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது என்கிறார் நடிகை சாந்தினி தமிழரசன்.
வீட்டில் பெற்றோரும் பாட்டி தாத்தாவும் இருக்கிறார்களாம். எனவே, தன் மூலமாக அவர்களுக்கு கிருமித்தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால்தான் இரட்டிப்புக் கவனம் தேவைப்படுவதாகச் சொல்கிறார்.
தற்போது 'வார்ட் 126' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சாந்தினி. ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதும் படக்குழுவினரைச் சந்திப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறதாம்.
"கொரோனா பெருந்தொற்றுக் காலகட்டம் சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தி உள்ளது. மேலும், பல விஷயங்களை மாற்றி அமைத்துள்ளது.
"உதாரணமாக, படப்பிடிப்பின் போது முகக்கவசம் அணிய வேண்டியுள்ளது. இதனால் நமது ஒப்பனை கலைந்துபோகும். அதிலும் குறிப்பாக உதட்டுச்சாயம் அழிந்துவிடும். அதனால் முகக்கவசம் அணியும் முன்பு உதட்டுச்சாயத்தை நாமே அழித்துவிடுவது நல்லது.
"இதனால் பலமுறை ஒப்பனையை சரிசெய்ய வேண்டிஉள்ளது. முன்பெல்லாம் படப்பிடிப்பின் இடைவெளியில் இஷ்டம்போல் சாப்பிடுவேன். இப்போது அவ்வாறு செய்வதில்லை.
"கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் இருக்கும் வேளையில் உணவுக்கட்டுப்பாடும் நல்ல சுகாதார பழக்க வழக்கங்களும் தேவை. இதனால் படப்பிடிப்பின்போது எனக்கு வீட்டில் இருந்தே அம்மா சமைத்த உணவு வந்துவிடும். நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் உணவு வகைகளாகப் பார்த்து அம்மா சமைத்து அனுப்புகிறார்.
"அதே போல் முன்பெல்லாம் வீட்டில்தான் உடற்பயிற்சி மேற்கொள்வேன். இப்போது படப்பிடிப்புக்கு இடையேயும் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குகிறேன். விவேக கைக்கடிகாரத்தைக் கட்டிக்கொண்டு தினமும் பத்தாயிரம் அடிகளாவது நடக்க வேண்டும் என்பதுதான் எனது இலக்கு.
"இப்படி உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியின் மூலம் உடல்நலனைப் பேண முடிகிறது. மற்றவர்களும் இதைச் செய்ய வேண்டும் என்பதுதான் எனது அறிவுரை.
"தினமும் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும்போது எனக்காக வீட்டில் நான்கு பெரியவர்கள் காத்திருப்பது நினைவுக்கு வரும். நான் சற்று கவனக்குறைவாக இருந்தால் அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற நினைப்பே என்னை கூடுதல் கவனத்துடன் இயங்க வைக்கிறது.
"தற்போது நடித்து வரும் படங்களைத் தவிர வேறு வாய்ப்புகள் எதையும் ஏற்கவில்லை. இயல்புநிலை திரும்பிய பிறகுதான் எல்லாவற்றிலும் தெளிவாக முடிவெடுக்க இயலும்.
"தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தான் படப்பிடிப்புகள் நடத்தப்படுகின்றன. இருந்தாலும் மனதுக்குள் ஒருவித அச்ச உணர்வு நிலவுகிறது. இதை மறைத்து பலன் இல்லை.
"முன்பு படப்பிடிப்புத்தளம் கலகலப்பாக இருக்கும். இப்போது நம்மைச் சுற்றி இருப்பவர்களை அடையாளம் காண்பது கூட கடினமாக இருக்கிறது. காரணம் எல்லோருமே முகக்கவசம் அணிந்துதான் வலம் வருகிறோம்.
"ஒரு வகையில் இந்த கொரோனா கிருமி நம்மை பொறுப்புள்ள மனிதர்களாக மாற்றி உள்ளது எனலாம். வீட்டில் இருப்பவர்கள், நம்முடன் நெருங்கிப் பழகுபவர்களின் நலனில் கூடுதல் அக்கறை ஏற்பட்டுள்ளது. நம்மால் பிறர்க்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று நினைக்கும் போதே நாம் சரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் மனதில் வேரூன்றி விடுகிறது.
"பெருந்தொற்று முடிவுக்கு வந்தாலும் நாம் தொடர்ந்து கவனத்துடன் செயல்பட்டால்தான் வாழ்க்கை இயல்பாக இருக்கும்," என்கிறார் சாந்தினி.
, :
சாந்தினி

