கொரோனா நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏழை எளியவர்களுக்குத் திரையுலகத்தினர் பல்வேறு வகையிலும் உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இந்தி நடிகர் சோனு சூட் பல கோடி ரூபாய் செலவிட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப உதவிக்கரம் நீட்டியது அனைவருக்கும் தெரியும். இப்படிப்பட்ட நல்ல மனம் கொண்ட திரைக்கலைஞர்களின் பட்டியலில் இப்போது மாளவிகா மோகனனும் இணைந்துள்ளார்.
கேரளாவில் உள்ள பழங்குடியினக் குழந்தைகளின் கல்விக்காக அவர் நிதி திரட்டி வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள வயநாடு மலைப்பகுதிக்குச் சென்றிருந்தாராம். அப்போது அங்குள்ள பழங்குடியின மக்களின் வாழ்க்கைநிலை அவரைக் கவலைப்பட வைத்துள்ளது. அப்போதே அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் முடிந்ததைச் செய்யவேண்டும் என முடிவெடுத்ததாகச் சொல்கிறார்.
இந்நிலையில் தாம் சந்தித்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக்கு உதவ விரும்புவதாக தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மாளவிகா.
"என் மனதுக்கு நெருக்கமான சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். குழந்தைகளின் கல்விக்கு உதவுவதன் மூலம் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமையும்.
"அவர்கள் தங்களையும் உயர்த்திக்கொண்டு குடும்பம், சமூகம் ஆகியவற்றுக்காகவும் பாடுபட முடியும். அங்குள்ள மக்களுக்கு அடிப்படை, சுகாதார கல்வி வசதிகள் கூட இல்லை. பலவற்றைச் செய்து கொடுப்பது நமது கடமை எனக் கருதுகிறேன்," என்கிறார் மாளவிகா.
ஊரடங்கின்போது பழங்குடியினக் குழந்தைகளால் பள்ளிக்கூடம் செல்ல முடியவில்லை என்பதுடன் மடிக்கணினியோ விவேக கைபேசியோ இல்லாததால் இணையம் வழியிலான கற்றல் நடவடிக்கைகளிலும் பங்கேற்க முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
எனவே, அங்குள்ள குழந்தைகள் அனைவருக்கும் மடிக்கணினியும் கைபேசியும் மிக அவசியம் என்கிறார்.
"அங்குள்ள 211 குழந்தைகளுக்கு இத்தகைய தேவை உள்ளது எனக் கண்டறிந்துள்ளோம். உடனடியாக அனைவருக்கும் வாங்கித்தர முடியாவிட்டாலும் பத்து குழந்தைகளுக்கு ஒரு மடிக்கணினியும் கைபேசியும் இருந்தால்கூட போதுமானது.
"அக்குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்வர். குழந்தைகள் படிக்கத் தயாராக இருக்கிறார்கள். உதவி செய்வது நம் கையில் உள்ளது," என்று மாளவிகா மோகனன் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

