திரைப்படங்களில் நடிப்பது, அவற்றை இயக்குவது என பெரிய பொறுப்புகளுக்கு மத்தியில் வானொலி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட வேறு சில விஷயங்களிலும் கவனம் செலுத்துகிறார் ஆர்.ஜே. பாலாஜி.
புது முயற்சிகளில் ஈடுபடுவது என்றால் இவருக்கு மிகுந்த ஆர்வம். அந்த வகையில் 'ஸ்பாட்டிஃபை' என்ற புதிய செயலி வழி 'நாலணா முறுக்கு' என்ற நிகழ்ச்சியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளாராம்.
எப்படி பல வேலைகளை ஒரே சமயத்தில் கையாள முடிகிறது என்று கேட்டால், தனக்கே உரிய பெரும் சிரிப்புடன், எதுவுமே சுமையாகத் தெரியவில்லை என்றும் விரும்பி செய்தால் எல்லாம் பிடித்துப் போகும் என்றும் பாலாஜியிடம் இருந்து பதில் வருகிறது.
"நடிகர், இயக்குநர், கிரிக்கெட் வர்ணனையாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று ஓடிக்கொண்டு இருக்கிறீர்களே என்று சிலர் என்னிடம் நேரடியாகவே கேட்டுள்ளனர்.
"இந்தக் கொரோனா ஊரடங்கு வேளையில் நான்கைந்து கதைகளைத் தயார் செய்தேன் என்று திரையுலக நண்பர்கள் சிலர் சொல்வார்கள்.
"ஆனால் நானோ, வீட்டில் சமையல் செய்தது, குழந்தைகளுடன் விளையாடியது என்று இயல்பாக பொழுதைக் கழித்தேன். 'மூக்குத்தி அம்மன்' படம் முடித்த பிறகு கிடைத்த இடைவெளியில் கிரிக்கெட் வர்ணனைக்கு நேரம் ஒதுக்க முடிந்தது. இப்போது இசை செயலி என்ற புது விஷயத்தில் கவனம் செலுத்துகிறேன்," என்கிறார் ஆர்ஜே பாலாஜி.
புதுப்புது விஷயங்கள்தான் தமக்கு தேவையான சக்தியைத் தருகிறது என்று சொல்பவர், அடுத்து 'மூக்குத்தி அம்மன்' படக்குழுவுடன் மீண்டும் இணைய உள்ளார். அடுத்தடுத்து சில கதைகளை எழுதி இயக்க வேண்டும் என்றும் விரும்புகிறாராம்.
"எனது அடுத்த படத்திலும் சரவணனுடன் இணைந்துதான் பணியாற்றுவேன். இருவரும் சேர்ந்து படம் இயக்கினால் நிச்சயம் நல்ல படைப்பாக உருவாகும். இதுதவிர பெரிய இயக்குநர்கள் சிலரிடம் கதை கேட்டுள்ளேன். வாய்ப்பிருந்தால் அவற்றில் நடிப்பேன்," என்கிறார் பாலாஜி.
'நாலணா முறுக்கு' நிகழ்ச்சி குறித்து கேட்டால் உற்சாகமாகி விடுகிறார். நல்ல விஷயங்களை மட்டும் பேசும் களமாக இதைப் பயன்படுத்த உள்ளாராம்.
"எனது வழக்கமான பணிதான் என்றாலும் வேறொரு களத்தில் பணியாற்றுகிறேன். வாரந்தோறும் திங்கள்கிழமை இந்த நிகழ்ச்சியை வழங்குவேன். என்னைச் சுற்றி நடக்கும் நல்ல விஷயங்களை ஒலி வடிவில் வழங்கப் போகும் முதல் நிகழ்ச்சி இது.
"தற்போது இணையத்தில் இடம்பெறும் எல்லா விஷயங்களும் வேகமாகப் பரவுகின்றன. முன்பெல்லாம் தமிழகத்தில் வயதான பாட்டிமார்கள் கூறு கட்டி பழங்கள் விற்பார்கள். அவற்றில் நிறைய பூச்சிகள் இருக்கும். பூச்சிகள் உள்ள பழம்தான் பூச்சிக்கொல்லி இல்லாத நல்ல பழம். இது பலருக்குத் தெரியவில்லை.
"வயதான பாட்டிக்கும்கூட கொரோனா நிவாரண நிதி வாங்கவேண்டும் என்றால் அடையாள அட்டை தேவைப்படுகிறது. அப்படியொரு பாட்டிக்கு ஒரு பையன் ஆதார் அட்டை வாங்கித் தந்து உதவுகிறான். இவையெல்லாம் நல்ல விஷயங்கள்.
"அதேசமயம் சுவாரசியமான விஷயங்களையும் பகிர்வேன். சில நாள்களுக்கு முன்பு காற்பந்தாட்ட வீரர் ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது, தன் அருகே இருந்த குளிர்பான போத்தலை ஒதுக்கி வைத்துவிட்டு தண்ணீர் போத்தலைத் தன் அருகே எடுத்து வைத்துக்கொண்டார்.
"இதுபோன்ற தகவல்களையும் பகிர்ந்து கொள்வேன்," என்கிறார் பாலாஜி.
ஆர்.ஜே. பாலாஜி
, :

