சில நடிகர், நடிகைகள் நடித்து வரும் படங்கள் குறித்த அண்மைத் தகவல்கள், அவர்களின் அடுத்த நகர்வுகள் குறித்து தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு எப்போதுமே ஆர்வம் இருக்கும். அத்தகைய தகவல்களின் தொகுப்பு இது.
'பிசாசு 2' படத்தில் ஆண்ட்ரியா வெளிப்படுத்தியுள்ள இயல்பான நடிப்புக்காக அவருக்குத் தேசிய விருது கிடைக்கக்கூடும் என்கிறார் அதன் இயக்குநர் மிஷ்கின். அந்தளவு தனது கதாபாத்திரத்துக்கு ஏற்ப பக்குவமாக நடித்துள்ளாராம் ஆண்ட்ரியா.
'பிசாசு 2' படம் தனது வழக்கமான பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது என்றாலும் சில புதிய விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என்கிறார் மிஷ்கின்.
ஆண்ட்ரியா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, கௌரவ வேடத்தில் அசத்தி உள்ளாராம் விஜய் சேதுபதி. கார்த்திக் ராஜாவின் இசை கதைக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது என்கிறார்.
இந்நிலையில் டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார் மிஷ்கின். அப்போது ஆண்ட்ரி யாவை முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பது குறித்து ரசிகர்கள் சிலர் கேட்க, அவர் திறமையான நடிகை என்றும் இம்முறை தேசிய விருது கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என தாம் நம்புவதாகவும் கூறினார் மிஷ்கின். மேலும், விஜய் போன்ற நடிகரை வைத்து படம் இயக்கினால் அது ஜேம்ஸ்பாண்ட் பாணியில் அமைந்த படமாக இருக்கும் என்றார்.
புரட்சி இளையராக அதர்வா
நடிகர் அதர்வா தமது அடுத்த படத்தில் புரட்சி சிந்தனை கொண்ட இளையராக நடித்துள்ளார். 'அட்ரஸ்' என்ற தலைப்பில் உருவாகி உள்ள இந்தப் படத்தை ராஜமோகன் இயக்குகிறார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள இப்படத்தில் அதர்வா ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் பெயர் காளி.
சிறு வேடம் என்றாலும் நட்புக்காக நடித்துள்ளாராம். இதில் அவரது ஜோடியாக பூஜா காவேரி நடித்துள்ளார். நேற்று வெளியான இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கனமான பாத்திரத்தில் தனுஷ்
தனது சகோதரன் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் 'நானே வருவேன்' படத்துக்கான பணிகளைத் துவங்கி விட்டாராம் தனுஷ். தனது கதாபாத்திரத்தை மெருகேற்றுவதற்கான பயிற்சியிலும் தேடலிலும் ஈடுபட்டுள்ளாராம்.
இப்படத்துக்கான புகைப்படம் எடுக்கும் வேலை முடிந்துள்ளது. விரைவில் படத்தின் சுவரொட்டி வெளியாகுமாம். ஆகஸ்ட் 20ஆம் தேதி படப்பிடிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் தனுசுக்கு கனமான கதாபாத்திரத்தை அளித்துள்ளாராம் செல்வா.
ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம்
'மேயாத மான்', 'ஆடை' ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் அடுத்து சந்தானத்தை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.
அவர் சொன்ன கதை பிடித்துப் போனதால் உடனே கால்ஷீட் ஒதுக்கிவிட்டாராம் சந்தானம்.
அவரது நடிப்பில் அடுத்து 'டிக்கிலோனா', 'சர்வர் சுந்தரம்' ஆகிய படங்கள் வெளியீடு காணத் தயாராக உள்ளன. அதையடுத்து 'சபாபதி' படத்தில் நடித்து வருகிறார். இதன் எழுபது விழுக்காடு படப்பிடிப்பு முடிந்து விட்டதாம்.
'துப்பாக்கி' இரண்டாம் பாகத்தில் கமல்
கமல்ஹாசன் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'விக்ரம்-2' படத்தில் நடித்து வருகிறார். அதை முடித்த கையோடு அவர் 'துப்பாக்கி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான முதல் பாகத்தில் விஜய் நடித்திருந்தார். இரண்டாவது பாகத்திலும் அவரையே நடிக்க வைக்க விரும்பினார் முருகதாஸ்
எனினும் கதை பிடிக்காததால் விஜய் ஒதுங்கி விட்டதாகவும் இதனால் ஏமாற்றமடைந்த முருகதாஸ் கமலை அணுகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதல் பாகத்தில் விஜய் நடித்த உளவுப்பிரிவு அதிகாரி வேடத்தில்தான் கமலை நடிக்கக் கேட்டுள்ளாராம் முருகதாஸ். அவர் நடிப்பது உறுதியானதும் இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும்.

