'சூர்ப்பனகை' என்ற புதிய படத்தில் நடித்துள்ளார் ரெஜினா கசாண்ட்ரா. திகிலும் வரலாற்றுப் பின்னணியும் கொண்ட படமாக உருவாகி இருக்கிறது.
ஒரு பெண்ணின் மூர்க்கத்தனமும் காதலும் இணைந்தால் என்னவாகும் என்பதுதான் படத்தின் கதைக்கருவாம். கார்த்திக் ராஜு இயக்குகிறார்.
கதைப்படி ரெஜினா தொல்பொருள் ஆய்வாளராக வருகிறார். அப்போது 100 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக்கூடு ஒன்றைக் கண்டெடுக்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை விரிவாகக் காட்சிப்படுத்தி உள்ளனர். இதில் இடம்பெறும் 'கிராஃபிக்ஸ்' காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும் என்கிறார் இயக்குநர் கார்த்திக் ராஜு.
இவரது மேற்பார்வையில்தான் 'படையப்பா', 'தசாவதாரம்' உட்பட பல படங்களின் 'கிராஃபிக்ஸ்' காட்சிகள் உருவாக்கப்பட்டன.
"பொதுவாக ராமன், ராவணன், சீதை என்றுதான் புராணப் பெயர்களை மையமாக வைத்து திரைப்படங்கள் உருவாக்குவார்கள். ஆனால் 'சூர்ப்பனகை' என்று தலைப்பு வைத்திருப்பது பலரையும் யோசிக்க வைத்துள்ளது. அதற்கான காரணம் படம் பார்க்கும்போது தெரியும்," என்கிறார் கார்த்திக் ராஜு.
"தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ரெஜினா, புதைகுழியாக இருந்த குறிப்பிட்ட இடத்தில் காவல்துறைக்கு உதவும் வகையில் ஆய்வு மேற்கொள்கிறார். அப்போது கிடைக்கும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக்கூடு பல கேள்விகளை எழுப்புகிறது.
"அப்போது முதல் திரைக்கதையில் வேகம் கூடும். இரண்டாம் பாதியில் கடந்த 1920களில் நிகழ்ந்த சில சம்பவங்கள் இடம்பெறும்," என்கிறார் கார்த்திக் ராஜு.
முதல் பாதி நகைச்சுவையாக கடந்து செல்லும் என்றால், இரண்டாம் பாதியில் திகிலும் பதற்றமும் அதிகம் இருக்குமாம்.
ரெஜினாவுடன் மன்சூர் அலிகான், ஜெயப்பிரகாஷ், அக்ஷரா கௌடா என பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் படம் இது. கோகுல் பினாய் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். முதல் முறையாக இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் தோன்றுகிறார் ரெஜினா.
"கதையைக் கேட்ட உடனேயே அவர் ஆச்சரியப்பட்டார். அவர் நடித்த 'எவரு' எந்த தெலுங்கு படத்தைப் பார்த்த பிறகுதான் என் கதைக்கு பொருத்தமாக இருப்பார் எனத் தோன்றியது. அதிலும் இரட்டை வேடங்கள் என்பதும் மேலும் உற்சாகமாகிவிட்டார்.
"அவருக்கென்று சில சண்டைக் காட்சிகள் உள்ளன. நீண்ட தூர மிதிவண்டிப் பயணம், இமய மலைக்குச் சென்று திரும்புவது என்று ஏதாவது சாகசத்தில் தொடர்ந்து ஈடுபடும் பெண் என்பதால் எதிர்பார்த்ததைவிட சண்டைக் காட்சிகளில் அசத்தியுள்ளார்.
"1920களில் நடக்கும் சில சம்பவங்களை விவரிக்கும் காட்சிகளுக்காக சிறப்பு ஒப்பனை போடவேண்டியிருந்தது. அதற்கு தினமும் மூன்று மணி நேரம் போல் ஆகும். இருப்பினும் படப்பிடிப்பு முடியும் வரை சிறிதளவும் முகம் சுளிக்காமல் அர்ப்பணிப்புடன் நடித்து முடித்தார்," என்கிறார் இயக்குநர் கார்த்திக் ராஜு.
வரலாற்றுப் பக்கங்களில் தாம் படித்தவற்றை நினைவில் வைத்திருந்து இப்படத்துக்கான கதையை எழுதியுள்ளாராம்.
குறிப்பாக, மனிதர்களை எவ்வாறெல்லாம் முன்பு கொடுமைப்படுத்தி உள்ளனர் என்பதுதான் இந்தக் கதையை எழுதுவதற்கான தூண்டுகோலாக இருந்தது என்கிறார்.
"அந்த காலத்தில் கைதிகளைக் கொடுமைப்படுத்த 'அயர்ன் மேய்டன்' என்ற கருவியைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒரு பெரிய பெட்டியைப் போன்ற இயந்திரத்தின் உள்ளே நிறைய ஆணிகளை அடித்து வைத்திருப்பார்களாம். தண்டனைக்குரிய ஒருவரை அதற்குள் அடைத்துவிடுவார்கள். பின்னர் அவர் கொடூரமாக சாகடிக்கப்படுவார்.
"இந்தச் சம்பவங்களை எல்லாம் மனதில் வைத்துதான் 'சூர்ப்பனகை' கதையை எழுதி இருக்கிறேன்," என்று சொல்லும் கார்த்திக் ராஜு, ரெஜினாவின் உழைப்பால் படப்பிடிப்பை குறித்த நேரத்தில் செய்து முடிக்க இயன்றது என்கிறார்.
"தமிழில் பேசி நடித்த உடனேயே மீண்டும் அதே காட்சியை தெலுங்கிலும் எடுப்போம். இப்படி இடைவிடாமல் நடிப்பதற்கு பொறுமை மட்டுமல்ல, திறமை, அர்ப்பணிப்பு ஆகியவையும் தேவை. அவை ரெஜினாவிடம் உள்ளன.
"இந்தப் படம் நிச்சயம் வெற்றிபெறும்," என்கிறார் இயக்குநர் கார்த்திக் ராஜு.
ரெஜினா கசாண்ட்ரா
, :

