திரைத் துளிகள்

2 mins read
aee1015a-1ff1-403a-9dee-409adb915e74
-
multi-img1 of 2

குறும்படம் மூலம் விழிப்புணர்வு

திரையுலகத்தினர் கொரோனா குறித்து பல்வேறு வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான நடிகை தன்யா குறும்படம் ஒன்றின் மூலம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

இந்தக் குறும்படத்தை 'கட்டில்' பட இயக்குநர் கணேஷ்பாபு இயக்கி உள்ளார்.

"ஏழைகளுக்கு உதவும் வகையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து இந்தக் குறும்படத்தில் விளக்கப்பட்டுள்ளது.

இதைப் பார்ப்பதன் மூலம் பொதுமக்கள் நிறைய பயனுள்ள தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் இதில் நடித்தது மனநிறைவைத் தந்தது" என்கிறார் தன்யா.

விஜய்சேதுபதி ஜோடியாக 'கருப்பன்', சசிகுமார் ஜோடியாக 'பலே வெள்ளையத்தேவா', அருள் நிதியுடன் 'பிருந்தாவனம்' ஆகிய படங்களில் நடித்துள்ள தன்யாவுக்கு, அதன் பின்னர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் மீண்டும் அருள்நிதியுடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் வில்லியாகிறார் சிம்ரன்

மீண்டும் வில்லியாக நடிக்க உள்ளார் சிம்ரன்.

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் மீண்டும் நடிக்கத் தொடங்கியதும் குணசித்திர வேடங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' படத்தில் வில்லியாக நன்கு நடித்தி ருந்ததாக விமர்சகர்கள் அவரைப் பாராட்டி இருந்தனர். இந்நிலையில் பிரசாந்த் நடிக்கும் 'அந்தகன்' படத்திலும் இவர்தான் வில்லியாம்.

இதில் கள்ளக்காதலுக்காக கணவரைக் கொலை செய்யும் குரூர வில்லியாக நடித்துள்ளார். இந்நிலையில் கார்த்தி நாயகனாக நடிக்கும் 'சர்தார்' படத்திலும் இவரை வில்லியாக ஒப்பந்தம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.