மும்பையில் புது வீடு கட்டிக் குடியேறி உள்ளார் ராஷ்மிகா மந்தனா. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிட்டுள்ளார்.
புதுவீட்டின் முன் தாம் செல்லப் பிராணியாக வளர்க்கும் நாய்க்குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மூன்று இந்திப் படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. 'குட்பை', 'மிஷன் மஞ்சு' ஆகிய இரு படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அண்மையில் இதற்காக மும்பை வந்திறங்கிய கையோடு புதுவீட்டை அலங்கரிப்பதற்காக பொருள்கள் வாங்குவதில் மும்முரமாக இருந்தார். அவர் அடிக்கடி கடைத்தெருக்களில் வலம் வந்ததை மும்பை ஊடகங்கள் படம்பிடித்து செய்தியாக வெளியிட்டன.
"இந்திப் படங்களில் நடிக்க எனக்குத் தூண்டுகோலாக இருந்தது கொரோனா பெருந்தொற்றுதான். காரணம் அதற்கு முன்பு தென்னிந்திய மொழிகளில் அதிக கவனம் செலுத்தியதால் எனக்கு எதுகுறித்தும் பரவலாக யோசிக்க முடியவில்லை.
"ஆனால், திடீரென படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் பாலிவுட் பக்கம் என் கவனம் திரும்பியது. இந்தியில் நடிக்க இதுதான் உகந்த நேரம் என்று மனதில் தோன்றியது.
"சரியாக இதேநேரம் பார்த்து 'மிஷன் மஞ்சு', 'குட்பை' பட வாய்ப்புகள் தேடிவந்தன. அந்த வாய்ப்புகளை ஏற்றுக் கொண்டேன்.
"ஏன் முன்பே இப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை என்று கேட்பீர்கள் எனில், அதற்கு என்னிடம் பதில் இல்லை. இதற்கு முன்பும் ஒன்றிரண்டு இந்திப்பட வாய்ப்புகள் தேடிவந்தன. ஆனால், அப்போது அவற்றை ஏற்கமுடியாத சூழ்நிலை நிலவியது," என்கிறார் ராஷ்மிகா மந்தனா.
ராஷ்மிகா மந்தனா

