இந்தப் படத்தில் விஜய் பாடுவாரா என்பது இதுவரை உறுதியாகவில்லை. எனினும் அவரைப் பாடவைக்க இயக்குநர் நெல்சன் முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது.
, :
விஜய் நடித்து வரும் புதுப்படத்துக்கு 'பீஸ்ட்' என்று தலைப்பு வைக்கப்பட்டதை அறிந்தவுடனேயே அது முழுநீள அடிதடிப் படம்தான் என்று ரசிகர்கள் முடிவு செய்துவிட்டனர்.
இந்நிலையில் அப்படம் குறித்துப் பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக விஜய்யின் அறிமுகக் காட்சி எவ்வாறு இருக்கும் என்று பெரிய விவாதமே நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் சண்டைப்பயிற்சியாளர்களாக அன்பு, அறிவு சகோதரர்கள் ஒப்பந்தமாகி உள்ளனர். ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற முதற்கட்டப் படப்பிடிப்பில் இரண்டு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இரண்டுமே அசத்தலாகவும் சிலிர்க்கச் செய்யும் வகையிலும் அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே 'பீஸ்ட்' அறிமுகக் காட்சியை 'போக்கிரி' படத்தைப் போல் அமைக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. விஜய் நடித்த படங்களிலேயே 'போக்கிரி'தான் சிறந்த அறிமுகக் காட்சியைக் கொண்டிருப்பதாக விஜய் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
அண்மைய சில படங்களில் விஜய்யின் அறிமுகக் காட்சி அதிக அலட்டல், ஆர்ப்பாட்டம் இன்றி அமைந்திருந்தன. அதற்கு நேர்மாறாக 'பீஸ்ட்' படத்தின் அறிமுகக் காட்சி அதிரடியாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே தனது அடுத்த படத்தில் விஜய் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற இருப்பதாக வெளியான தகவல் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ராஜு தயாரிக்க உள்ள படத்தில் விஜய் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கு முன்னணி இயக்குநராக உள்ள வம்சி கூறிய கதை பிடித்துப் போனதால் அதில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இதற்கு முன்பு விஜய் நடித்த படங்கள் பல 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் கண்டுள்ளன. இந்நிலையில் பாலிவுட் முன்னணி நடிகருக்கு இணையாக விஜய்யும் 100 கோடி சம்பளம் பெற இருக்கிறார்.
இதற்கிடையே 'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கமிங்' பாடல் பாகிஸ்தானிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூபில் மட்டும் சுமார் 200 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ள இந்தப் பாடல் அருமையாக இருப்பதாக பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் பாராட்டி உள்ளார்.
தமக்கு தமிழ் மொழி புரியாது என்றாலும் தென்னிந்திய இசை உலகின் மாயவித்தைக்காரர் நீங்கள்தான் என்று அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தை அவர் வாழ்த்தி உள்ளார்.
விஜய் நடித்த கத்தி, மாஸ்டர் ஆகிய படங்களுக்கு அனிருத்தான் இசையமைத்திருந்தார். இப்போது மூன்றாவது முறையாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் 'பீஸ்ட்' படத்திலும் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதற்கு முன்பு 'பீஸ்ட்' குறு காட்சித் தொகுப்புக்கு மென்மையாக இசையமைத்திருந்தார் அனிருத். அதற்கு ரசிகர்களின் பலத்த வரவேற்பு கிடைத்தது. பலரும் தங்கள் கைபேசியில் அந்த இசையைத்தான் 'ரிங்டோன்' ஆக வைத்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் தலைப்புக்கு ஏற்ப அதிரடியாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக அனிருத்தின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
'பீஸ்ட்' படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார். மேலும் யோகிபாபு, அபர்ணாதாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் விரைவில் தொடங்க உள்ள இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் இரண்டு பாடல் காட்சிகளைப் படமாக்க உள்ளனர். பிரபல நடன அமைப்பாளர் மனோஜ் பரமஹம்ஸா இப்பாடல்களுக்கு நடனம் அமைக்கிறார்.
படத்தின் இறுதிக்காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்க உள்ளதாகத் தகவல். இதற்காக மட்டும் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்று படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

