தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் எனத் தெரிந்ததை அடுத்து கோடம்பாக்கத்தினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மறுபக்கம் ரசிகர்களும் என்னென்ன படங்கள் வெளியீடு காணும் என்பதை அறிய ஆவலுடன் உள்ளனர். பெரிய நடிகர்கள் முதல் புதுமுகங்கள் நடித்த படம் வரை பலவும் வெளியீடு காண வரிசையில் காத்திருக்கின்றன. அவற்றுள் சில முக்கிய படங்கள் குறித்து பார்ப்போம்.
'துருவ நட்சத்திரம்'
விக்ரம் ரசிகர்கள் கூடுதல் மகிழ்ச்சி அடையலாம். அவரது நடிப்பில் உருவான இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியீடு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'கோப்ரா', 'துருவ நட்சத்திரம்' ஆகிய இரு படங்களுமே பெரிய பொருட்செலவில் உருவாகி உள்ளன. எனினும் 'துருவ நட்சத்திரம்' சில பிரச்சினைகளால் முடங்கிப்போனது. திரில்லர் வகைப் படமாக உருவாகி உள்ள இப்படத்தை கெளதம் மேனன் எழுதி இயக்கி உள்ளார். விக்ரம், ரீது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். 'ஒரு மனம்...' பாடல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
'கோப்ரா'
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
'தும்பி துள்ளல்...' பாடல் வெளியானது முதல் ரசிகர்கள் விரும்பும் பாடல் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் ஒன்றாக இடம்பெற்று வருகிறது. இதில் பல தோற்றங்களில் விக்ரம் நடித்துள்ளார். தாய்நாட்டுக்காக வெளிநாடு சென்று துப்பறியும் உளவாளியாக விக்ரம் நடித்துள்ளார்.
'மாநாடு'
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ளது 'மாநாடு'. இவருடன் எஸ்.ஜே. சூர்யா, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இணைந்துள்ளனர் என்பதாலேயே படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை யுவன் சங்கர் ராஜா. படத்தின் முன்டோட்டக் காட்சித் தொகுப்பு பல விவாதங்களைக் கிளப்பி உள்ளது. 65 கோடி ரூபாய் செலவில் உருவாகி உள்ளதாகத் தகவல்.
'இந்தியன் 2' பட விபத்தை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் படத்தின் தொழிலாளர்களுக்காக ரூ.30 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டதும் அடக்கம் என்பது பாராட்டுக்குரிய முக்கிய தகவல்.
'அண்ணாத்த'
ரசிகர்களின் எதிர்பார்ப்பில் முதல் இடத்தில் இருக்கும் படம் 'அண்ணாத்த'. சிவா இயக்குகிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடைசியாக ரஜினிக்குப் பாடிய பாடல் இடம்பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
'டாக்டர்'
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ளது 'டாக்டர். 'கோலமாவு கோகிலா' நெல்சன் இயக்கி உள்ளார். பிரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
யோகிபாபு, வினய் இருவரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார்.
'லாபம்'
எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி, ஷ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, தன்சிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி ஒரு சமூக ஆர்வலராக நடிக்கிறார். இப்படத்தை 7சிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து விஜய் சேதுபதியும் தயாரித்திருக்கிறார். 40 கோடி ரூபாய் செலவில் படம் உருவாகியுள்ளது.
விக்ரம்
, :

