திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
2856cde5-ed81-45ea-9a33-77d6d78055e6
-
multi-img1 of 3

மீண்டும் இணையும் 'மாரி' ஜோடி

நடிகர் தனுஷ், சாய் பல்லவி ஜோடி மீண்டும் ஒரு புதுப் படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இருவரும் இதற்கு முன்பு 'மாரி-2' படத்தில் இணைந்து நடித்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இருவரும் பாந்தமாக நடித்திருந்ததாகப் பாராட்டு கிடைத்தது.

இந்நிலையில் இயக்குநர் சேகர் கம்முல்லா இயக்கும் தெலுங்குப் படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். சேகர் இதற்கு முன்பு இயக்கிய 'ஃபிடா', தற்போது இயக்கி வரும் 'லவ் ஸ்டோரி' ஆகிய இரு படங்களிலும் சாய் பல்லவிதான் நாயகி.

எனவே தனுஷை வைத்து இயக்கும் படத்திலும் சாய் பல்லவி நடித்தால் நன்றாக இருக்கும் என கருதினாராம்.

இதுகுறித்து சாய் பல்லவியுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் கைகூடியதை அடுத்து விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அரசியல் கலந்த அடிதடிப் படமாக உருவாகிறது தனுஷின் முதல் நேரடித் தெலுங்குப் படம்.

தமன்னா: நான் ஒரு சமோசா பிரியை

தமக்குப் பிடித்தமான நொறுக்குத் தீனிகளில் சமோசாவுக்குத் தான் முதலிடம் என்கிறார் நடிகை தமன்னா.

அதிலும் சூடான 'மொறுமொறு' சமோசா என்றால் தட்டில் உள்ள அனைத்தையும் இவரே காலி செய்து விடுவாராம்.

"நாம் அனைவருமே உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்போம். ஆனால் இந்த அக்கறையையும் மீறி நொறுக்குத் தீனிகளைப் பார்த்தால் மனம் கிடந்து அல்லாடும்.

"நானும் அப்படித்தான். சமோசாவைப் பார்த்தால் என்னைக் கட்டுப்படுத்த இயலாது," என்று தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமன்னா.

மிக விரைவில் தெலுங்கில் ஒளியேறும் சமையல் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவர் பங்கேற்க உள்ளதாகத் தகவல்.

கமலுக்கு ஜோடியாகிறார் நதியா

மலையாளத்தில் வெற்றி பெற்ற 'த்ரிஷ்யம் 2' படம் தமிழில் 'பாபநாசம் 2' என்ற தலைப்பில் மறுபதிப்பாகிறது. இதில் கமல்ஹாசன் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகத் தகவல்.

முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் கௌதமி. ஆனால் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்கவில்லை.

இந்நிலையில், அவருக்கு பதிலாக நடிகை நதியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணி உறுதியானால் நடிகை நதியா, கமலுடன் நடிக்கும் முதல் படமாக இது அமையும். முன்னதாக இப்பாத்திரத்தில் மீனா நடிக்கக் கூடும் என செய்தி வெளியானது.

இதற்கிடையே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'விக்ரம்' படத்தில் நடிகர் நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஏற்கெனவே லோகேஷ் இயக்கத்தில் இவர் 'கைதி' படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.