'ராஜபீமா' படத்தில் யானைகளுடன் இணைந்து நடித்த அனுபவத்தை மறக்க இயலாது என்கிறார் நடிகர் ஆரவ்.
யானைகளுடன் எப்படிப் பேசிப் பழகுவது, அவற்றின் அன்பை எப்படிப் பெறுவது என்பதெல்லாம் இவருக்கு இப்போது அத்துப்படியாகி விட்டதாம்.
இனிமையான தருணங்களைப் போலவே யானைகளுடன் நடித்தபோது இவர் மிரண்டுபோன சம்பவங்களும் நிகழ்ந்தனவாம்.
படப்பிடிப்புக்கு முன்பு முந்நூறுக்கும் மேற்பட்ட யானைகளின் படங்களைப் பார்த்து இறுதியாக பத்ரா என்ற யானையைத் தேர்வு செய்திருக்கிறார்கள். அது கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் பயிற்றுவிக்கப்பட்ட யானை.
"புகைப்படத்தில் பார்த்தபோது அந்த யானையின் உருவத்தை ஓரளவு கற்பனை செய்து வைத்திருந்தேன். ஆனால் நேரில் பார்த்தபோது அதன் பிரம்மாண்ட உருவம் என்னை அசரடித்தது. யானைகளுடன் நடிக்கவேண்டும் என்று நினைத்தபோதே ஒருவித அச்சம் ஏற்பட்டது.
"பொதுவாக யானைகள் அவற்றுக்குத் தெரிந்த மொழியில் இடப்படும் உத்தரவுகளைத்தான் பின்பற்றும். அந்த வகையில் எனக்கு பத்ரா யானையுடன் பழக ஐந்து நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
"மலையாளம் தெரியும் என்பதால் யானைப்பாகன் சொல்லிக் கொடுத்ததை விரைவில் கற்றுக் கொண்டேன்.
"ஆனால், பத்ராவுடன் நெருக்கமாவதற்குள் படப்பிடிப்பை பாலக்காடு பகுதியில் இருந்து தாய்லாந்துக்கு மாற்றிவிட்டனர். அங்கு புதிய சூழல், புது யானை என அனைத்தையும் மீண்டும் முதலில் இருந்து தொடங்கினோம். ஆனால் தாய்லாந்து யானையுடன் பழகுவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. நான் பேசியதும் அதற்குப் புரியவில்லை. பயிற்சியாளரை வைத்துக் கொண்டுதான் படப்பிடிப்பை நடத்தினோம்.
"அதேசமயம் பத்ராவுடன் பழகியது தாய்லாந்தில் ஓரளவு கைகொடுத்தது. படப்பிடிப்பின்போது நடந்த சம்பவம் என்னை மிரள வைத்தது. மொத்த படக்குழுவினரும் சேர்ந்து உயிரைக் காப்பாற்றினர்," என்று இன்னமும்கூட அதிர்ச்சியில் இருந்து மீளாதவராகப் பேசுகிறார் ஆரவ்.
அப்படி என்ன நடந்தது?
குறிப்பிட்ட ஒரு காட்சியில் யானை தனது தும்பிக்கையால் இவரது கையைப் பாசத்துடன் பிடித்துக் கொள்வது போல் படம்பிடிக்க இருந்தனர். அப்போது அந்தப் பயிற்சியாளர் தாய்லாந்து மொழியில் உத்தரவுகளைப் பிறப்பிக்க, அந்த யானை ஆரவ்வின் கையைப் பிடித்து பலமாக இழுத்திருக்கிறது. சுமார் நூறு மீட்டர் தூரத்துக்கு அவ்வாறு இழுத்துச் செல்லப்பட்டதால் வலியில் அலறித் துடித்திருக்கிறார் ஆரவ். படக்குழுவினர் அதிர்ந்துபோயினர். அவரை மீட்பதற்கும் முயன்றுள்ளனர். ஆனால் யானையின் பிடி இறுகியதுடன் முன்பைவிட பலமாக அவரை இழுத்திருக்கிறது.
"ஒருகணம் உலகமே இருண்டு போனது. நல்லவேளையாக அந்தப் பயிற்சியாளர் துரிதகதியில் செயல்பட்டு சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதன்பிறகுதான் யானை என்னை விடுவித்தது. பிறகுதான் ஒரு விவரத்தை அறிந்தோம். 'கையைப் பிடித்துக்கொள்' என்று சொல்வதற்குப் பதிலாக, 'பிடித்து இழு' என்று பொருள்பட யானைக்குத் தவறாக உத்தரவிட்டுள்ளார் அந்தப் பயிற்சியாளர். அதனால்தான் குழப்பம் நேர்ந்துள்ளது," என்கிறார் ஆரவ்.
மற்றொரு சம்பவத்தில் யானையின் மீதிருந்த இவர் தவறி கீழே விழுந்துவிட்டாராம். எங்கே யானை தன்னை மிதித்து விடுமோ என்ற பயத்தில் மயங்கி உள்ளார்.
"ஒருநாள் எனக்கு எதிரே இருந்த கேமராவைப் பார்த்துக்கொண்டே யானை மேல் இருந்த நான் கீழே இறங்க முயன்றபோது பிடிமானம் இன்றி விழுந்தேன். யானையின் கால்களுக்கு அருகில் விழுந்து கிடந்தபோது அச்சமாக இருந்தது. உடனடியாக, வேகமாக உருண்டு, அதன் கால்களில் இருந்து விலகிச் சென்று எழுந்து நின்றதும் மயங்கிவிட்டேன். நிறைய சிராய்ப்புகள், காயங்களுடன் நடித்து முடித்திருக்கிறேன். நடந்தவற்றை நினைத்து வருத்தப்பட ஒன்றுமில்லை.
"இவையெல்லாம் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அனுபவங்கள். யானைகளுடன் நடித்தபோது சில ஆபத்துகளை எதிர்கொண்டேன் எனில், இப்போது பாம்புகளுடனும் புலிகளுடனும் நடிக்கக் கேட்டு சிலர் அணுகி உள்ளனர்," என்று சிரிக்கிறார் ஆரவ்.
, :
ஆரவ்

