'சார்பட்டா பரம்பரை' படத்தின் வெளியீட்டுக்காக அதன் நாயகன் ஆர்யா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் காத்திருக்கிறது. காரணம், இப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாகிறது.
யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய தொகைக்கு வெளியீட்டு உரிமை கைமாறி இருப்பதாகத் தகவல். மேலும் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள் கூறுகிறார்கள்.
ஆர்யா நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் கலையரசன், பசுபதி, ஜான் விஜய், காளி வெங்கட் என பெரிய நடிகர் கூட்டமே களமிறங்கி உள்ளது.
கடந்த 1970, 80களில் வடசென்னை பகுதியில் பிரபலமாக இருந்தது ஆங்கில குத்துச் சண்டை. இதில் பங்கேற்பவர்கள் மிகுந்த ஆவேசத்துடன் மோதிக்கொள்வார்கள். அந்தக் குத்துச் சண்டைதான் படத்தின் கதைக்களம்.
சார்பட்டா பரம்பரை, இடியப்ப பரம்பரை என இரண்டு முக்கியப் பரம்பரைகளுக்கு இடையே ஆண்டாண்டு காலமாக பகை நீடித்து வருகிறது. இரு பரம்பரைகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து குத்துச்சண்டை மேடையில் மோதிக் கொள்வதும் அவர்களுக்கு மத்தியில் நிலவும் கோபத்தையும் பகையையும்தான் சித்திரிக்கிறது திரைக்கதை. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்திலேயே படப்பிடிப்பை முடித்துவிட்டார் ரஞ்சித். அதன் பின்னர் தொழில்நுட்பப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. இதனால் மார்ச் மாதமே இப்படம் திரைகாணும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை, ஊரடங்கு உத்தரவு என சில காரணங்களால் வெளியீடு தடைபட்டது.
இந்நிலையில் மூன்றாவது அலை வரக்கூடும் என்றெல்லாம் பேசப்படுவதால் நேரடியாக இணையத்தில் இப்படத்தை வெளியிட உள்ளனர்.
இதுகுறித்து விவரமறிந்த முன்னணி 'ஓடிடி' நிறுவனங்கள் வெளியீட்டு உரிமைக்குப் போட்டியிட்டதில் தயாரிப்புத் தரப்பே எதிர்பாராத வகையில் நல்லதொகைக்கு விலை போயிருக்கிறதாம்.
ஆர்யாவின் நடிப்பு இப்படத்துக்குப் பெரும் பலம் சேர்த்திருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். படப்பிடிப்பைத் தொடங்கும் முன்பே எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது குறித்து ஆர்யாவிடம் விவரமாகச் சொல்லிவிட்டாராம் ரஞ்சித்.
அதையடுத்து கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டு ரஞ்சித் எதிர்பார்த்த உடற்கட்டுடன் தயாராகிவிட்டார் ஆர்யா. அவரது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை ரஞ்சித் வெகுவாகப் பாராட்டுகிறார்.
அதேபோல் பசுபதியின் நடிப்பும் அவர் கதைப்படி வகுக்கும் சில வியூகங்களும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்று இயக்குநர் தரப்பில் கூறப்படுகிறது. இந்தப் படம் தனது திரைப்பயணத்தில் மற்றொரு முக்கிய மைல் கல்லாக அமையும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் நம்பிக்கையுடன் கூறி வருகிறாராம் ஆர்யா.

