'கைதி' படத்தின் கதை தன்னுடையது என்று உண்மையாகவே சிறைக் கைதியாக இருந்த ஒருவர் உரிமை கோரி இருக்கிறார். இது கோடம்பாக்கத்தில் மட்டுமல்லாமல் மலையாளத் திரையுலகத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். அதற்கு முன்பு அவர் இயக்கிய இரு படங்களில் ஒன்றுதான் 'கைதி' என்பதும் அதில் கார்த்தி நடித்திருந்தார் என்பதும் தெரிந்த செய்திதான்.
விமர்சன மற்றும் வசூல் ரீதியில் 'கைதி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தின் முடிவில் இரண்டாம் பாகம் வரும் என்பதை உணர்த்தி இருப்பார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில் இரண்டாம் பாகத்துக்கான பணிகளை அவர் தொடங்கி இருப்பதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கார்த்தியின் ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை. மாறாக ஒரு சர்ச்சைதான் வெடித்திருக்கிறது.
'கைதி' படத்தின் கதை ராஜீவ் என்ற நிஜ சிறைக்கைதி ஒருவருடையதாம். ராஜீவ், 'கைதி'யின் தயாரிப்புத் தரப்பைச் சந்தித்து கதையை விவரித்து முன்பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் பிறகு தனக்கே தெரியாமல் லோகேஷ் கனகராஜை வைத்து படத்தை எடுத்து முடித்துவிட்டனர் என்று குற்றம் சாட்டுகிறார் ராஜீவ்.
வெறும் பேச்சோடு நிற்காமல் கதை உரிமை தொடர்பாக சூட்டோடு சூடாக கேரள நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையின் முடிவில் 'கைதி' இரண்டாம் பாகத்துக்கும் மறுபதிப்பு செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்த நிலையில் தன் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.
படத்தின் கதை உரிமை தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அதிகமான தகவல்களை பகிர்ந்துகொள்ள இயலாது என்றும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மிக உறுதியாக மறுப்பதாகவும் எஸ்ஆர். பிரபு கூறியுள்ளார்.
தங்கள் தரப்பு உண்மையை சட்டப்படி நிரூபிக்க இயலும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். எனவே ஊடகங்கள் 'கைதி' படம் சார்ந்த எவரையும் செய்தி வெளியிடாமல் ஊடக தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று தயாரிப்புத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
"நீதிமன்றத்தில் சில விஷயங்கள் சொல்லப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் சட்டபூர்வமாக எங்களுக்கு இதுவரை எந்தத் தகவலும் வந்து சேரவில்லை. அதனால் கருத்து சொல்ல இயலாத நிலையில் உள்ளோம்.
"எங்களைப் பொறுத்தவரை லோகேஷிடம் கதை கேட்டோம். குறுகிய காலத்தில் முடிவு செய்து அதைப் படமாக எடுத்தோம், அவ்வளவுதான். நீதிமன்றத்தில் இருந்து உரிய தகவல்கள் கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதுவரை எதுவும் சொல்வதற்கு இல்லை," என்று தெளிவாகப் பேசுகிறார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.