அனுபமா: காதல் கைகூடவில்லை
தாம் ஒருவரைக் காதலித்ததாகவும் அது கைகூடவில்லை என்றும் இளம் நாயகி அனுபமா பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
இவர் தமிழில் அதர்வாவுடன் இணைந்து நடித்துள்ள 'தள்ளிப் போகாதே' படம் விரைவில் திரை காண உள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடினார் அனுபமா. அப்போது காதல் அனுபவங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அனுபமா, தமது காதல் தோல்வி அடைந்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.
"நானும் ஒருவரைக் காதலித்தேன். ஆனால், அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. இப்போது நான் யாரையும் காதலிக்கவில்லை," என்று கூறியுள்ளார் அனுபமா.
புதுப் படங்களில் நடிக்கும் நயன்தாரா
திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் நயன்தாரா மேலும் இரண்டு புதுப் படங்களில் நடிக்கத் தயாராகி விட்டாராம்.
ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளவர், 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் வேலைகளை விரைவில் முடிக்க உள்ளார்.
இதையடுத்து அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளார்.
இவற்றுள் ஒரு படம் விப்பின் இயக்கத்தில் மனோதத்துவ மும் மர்மங்களும் நிறைந்த படமாக உருவாகிறது. மற்றொரு படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகுமாம்.

