தமிழில் புதுமுகம் ஒருவர் நாயகனாக அறிமுகமானால் அந்தப் படத்தில் சஞ்சிதா ஷெட்டியை நாயகியாக எதிர்பார்க்கலாம்.
அசோக்செல்வன், அனிருத்தின் சகோதரர் ரிஷி, திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் என்று பலரது அறிமுகப் படங்களில் நாயகியாக நடித்துள்ளார் சஞ்சிதா.
இதற்கு இயக்குநர்கள் தம் திறமை மீது வைத்துள்ள நம்பிக்கையே காரணம் என்கிறார்.
"கதாநாயகர்களின் அறிமுகப் படம் என்றால் எந்த அளவு கவனமாக கதையைத் தேர்வு செய்திருப்பார்கள் என்று நான் விவரிக்க வேண்டியதில்லை. கதை நன்றாக இருப்பதுதான் இந்தப் படங்களை ஒப்புக்கொள்ள காரணம்.
"இதுவரை எட்டு கதாநாயகர்களின் முதல் படத்தில் நடித்திருக்கிறேன். விஜய் சேதுபதியிடம் எந்தக் கதாபாத்திரத்தை ஒப்படைத்தாலும் சிறப்பாக நடித்துவிடுவார். அதுபோல் அறிமுக நாயகர்களின் முதல் படத்துக்கு சஞ்சிதா பொருத்தமாக இருப்பார் என்று ரசிகர்களும் நினைப்பதை எனக்கு கிடைத்த பாராட்டாக, ஆசிர்வாதமாக கருதுகிறேன்," என்று சொல்லும் சஞ்சிதா, 'சூது கவ்வும்' படத்தில் நடித்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. காலம் இவ்வளவு வேகமாக ஓடும் என்பதை தம்மால் நம்ப முடியவில்லை என்கிறார்.
தற்போது பிரபுதேவாவுடன் 'பகிரா' படத்தில் நடித்து வருபவர், இயக்குநர் ராஜு முருகன் தயாரித்துள்ள 'கொஞ்சம் பேசு' என்ற தனி இசைப் பாடலுக்கான காணொளியிலும் நடித்துள்ளார்.
"தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. 'சூது கவ்வும்' படத்துக்குப் பிறகு இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன். ஆனால் இன்னமும்கூட அந்தப் படத்தைப் பற்றிதான் பேசுகிறார்கள். அதுதான் நான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் வெற்றி.
"அந்தப் படத்தில் நடித்தபோதுதான் கல்லூரி வாழ்க்கையைத் தொடங்கி இருந்தேன். சற்றே வயதுக்கு மீறிய கதாபாத்திரம் என்றாலும் என் நடிப்பு நிறைவாக இருந்தது. அதைப் பெருமையாகக் கருதுகிறேன். குறைந்தபட்சம் பத்து படங்களில் நடித்த அனுபவம் உள்ளவர்களுக்குத்தான் அத்தகைய கதாபாத்திரம் அமையும்," என்று சொல்லும் சஞ்சிதா, குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வருவது, நேரத்தை வீணடிக்காமலும் வேறு காரணங்களால் படப்பிடிப்பு நீண்டு சென்றாலும் முகம் சுளிக்காமல் ஒத்துழைப்பது என நல்ல பெயர் எடுத்துள்ளார்.
தம்மால் பிறர்க்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பாராம். இயக்குநர்களில் புதுமுகம், அனுபவசாலிகள் என்றெல்லாம் இவர் பிரித்துப் பார்ப்பதே இல்லை.
"எல்லா இயக்குநர்களிடம் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள ஏதேனும் சில விஷயங்கள் இருக்கும். எனவே, அவர்களது மாணவியாக இருக்கத்தான் விரும்புகிறேன். படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் யார் பெரியவர், யார் சிறியவர் என்பதில் எல்லாம் எனது கவனம் இருக்காது," என்று சொல்பவர், தாம் நடிக்கும் படங்களின் கதைக்கு அடுத்தபடியாக தமது உடல்நலத்தில் கவனம் செலுத்துகிறார்.
தினந்தோறும் யோகாவும் உடற்பயிற்சியும் செய்ய சஞ்சிதா தவறுவதே இல்லை. வாய்ப்பு கிடைத்தால் உடனே திருவண்ணாமலை சென்று மலையேறும் பயிற்சியில் ஈடுபடுகிறார்.
"தினமும் தியானத்துக்கு என இரண்டு மணி நேரம் ஒதுக்குவேன். நான் ஒரு இயற்கை ஆர்வலர். இயற்கை சார்ந்த விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் அவற்றில் ஈடுபடுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும்," என்று சொல்லும் சஞ்சிதா, இன்னும் கதாநாயகி சார்ந்த படங்களில் நடித்ததாகத் தெரியவில்லை.
அதுகுறித்து கேட்டால் அதுபோன்ற பல கதைகளைக் கேட்டும் தமக்கு மனநிறைவு ஏற்படவில்லை என்கிறார். இதுவரை 300க்கும் மேற்பட்ட திரைக்கதைகளைக் கேட்டுவிட்டாராம். ஆனால், அவற்றின் அமைப்பு சரியாக இல்லை என்கிறார்.
"எல்லோரும் சொல்வதைப் போல் எனக்கும் நான் நடிக்கும் கதைகள்தான் முக்கியமே தவிர எத்தனை படங்களில் நடித்தோம் என்ற எண்ணிக்கை என்பது முக்கியமல்ல. எதிர்காலத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள நல்ல கதைகள் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்," என்று சொல்பவர், தாம் நடித்துள்ள 'பார்ட்டி', 'பி-3', 'அழகிய கண்ணே' ஆகிய படங்களின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
, :
சஞ்சிதா ஷெட்டி

