திரைத் துளிகள்

2 mins read
847919b9-fadf-400e-92a1-d058d7ad97a9
-
multi-img1 of 3

சிவாவின் நெகிழ வைக்கும் பதிவு

நடிகர் சிவகார்த்திகேயன், ஆர்த்தி தம்பதியர்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை டுவிட்டர் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார் சிவா.

"18 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று என் தந்தை எனது மகனாக என் விரல் பிடித்திருக்கிறார். என் பல வருட வலி போக்க, தன் உயிர் வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த் துளிகளால் நன்றி. தாயும் குழந்தையும் நலம்," என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார் சிவா.

இத்தம்பதியர்க்கு ஆராதனா என்ற மகள் உள்ளார்.

ஒன்றுகூடி மகிழ்ந்த நடிகர், நடிகையர்

1980களில் தமிழ் சினிமாவில் அசத்திய நடிகர், நடிகைகள் ஆண்டுதோறும் ஒன்றிரண்டு முறை ஒன்றுகூடி மகிழ்கிறார்கள். நடிகை ராதிகா சரத்குமார் இதற்கான ஏற்பாடுகளைச் செய்வது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த வார இறுதியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதில் அம்பிகா, ராதா, சுகாசினி, குஷ்பு, பூர்ணிமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ராதிகா.

மேலும் இந்த முறை அனைவரும் பல்வேறு விஷயங்களைப் பேசி மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளி சிறுவனை தன் இசையில் பாட வைத்த இமான்

மாற்றுத் திறனாளி சிறுவனுக்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர் இமானுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த அச்சிறுவனின் பெயர் ஆதித்யா சுரேஷ். இச்சிறுவன் பாடும் காணொளிப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகி வந்தன. அவற்றைக் கண்ட இமான் உடனடியாக அச்சிறுவனை அழைத்துப் பேசியுள்ளார். பின்னர் தனது இசையில் பாட வாய்ப்பும் அளித்துள்ளார்.

சிறுவன் ஆதித்யா சுரேஷுடன் சஹானா என்ற சிறுமியும் இணைந்து பாடும் பாடல் அண்மையில் பதிவானது.

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில் இப்பாடல் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே 'சீறு' என்ற படத்தில் திருமூர்த்தி எனும் மாற்றுத்திறனாளி இளைஞனை இமான் பாட வைத்துள்ளார்.