தமிழக கிராமங்களைப் பார்க்கும் எவராக இருந்தாலும் அதன் அழகில் சொக்கிப் போவார்கள் என்கிறார் இளம் நாயகி காஷ்மிரா பர்தேசி.
தமிழில் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'அன்பறிவு' படத்தில் இவர்தான் நாயகி. கிராமத்துப் பின்னணியைக் கொண்ட கதை என்பதாலும் கிராமத்துப்பெண் கதாபாத்திரம் என்பதாலும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். கிராமத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்றபோது தனது கனவு நனவானதாக சொல்கிறார்.
"கிராம மக்களைச் சந்தித்துப் பேசுவது அலாதியான அனுபவம். நான் படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி அருகே இருந்த கிராமத்துக்கு முதன்முதலாகச் சென்றபோது படத்தயாரிப்பாளர் தியாகராஜன் அழகான ஓவியத்தைப் பரிசளித்து வரவேற்றார். அந்தத் தொடக்கமே மனதுக்கு இதமாக இருந்தது.
"புது ஊர், புது மக்கள், புது நிலப்பரப்பு, கலாசாரம் என்பதால் மனதில் ஒருவித பரவசம் இருந்தது. பொள்ளாச்சியில் தங்கியிருந்த நாங்கள் தினமும் சற்று தூரத்தில் அமைந்துள்ள ஒதுக்குப்புறமான கிராமத்துக்குச் செல்வோம். அவ்வாறு போகும்போது சாலையின் இருபுறங்களிலும் வரிசையாக நிமிர்ந்து நிற்கும் மரங்கள், சிறிய வீடுகள், அமைதியான சூழ்நிலை ஆகியவற்றில் மனம் லயித்துப் போவேன்.
"நகர்ப்புறங்களில் ஊரடங்கு அனைவரையும் முடக்கிப் போட்டிருக்க, பரந்து விரிந்துள்ள திறந்தவெளிகளில் கிராமத்து மக்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள். அதைக் கண்டபோது அவர்கள் அனைவரும் வரம் பெற்று வந்தவர்கள் என நினைக்கத் தோன்றியது," என்று சொல்லும் காஷ்மிரா, படப்பிடிப்பு முடிவதற்குள் கிராம மக்களுடன் தாம் நெருக்கமாகிவிட்டதாகச் சொல்கிறார்.
புதிய கலாசாரத்துடன் பிணைந்துகொள்ள வெகுநேரம் ஆகாது என்பவர், மக்களுடன் உறவாடினால்தான் எதுவும் சாத்தியமாகும் என்கிறார். கிராமப்புறத்தில் உள்ள பழமை வாய்ந்த சில வீடுகளையும் கண்டு ரசித்தாராம்.
"மரத்தால் ஆன தூண்கள், சுவர்களில் உள்ள முன்னோர்களின் புகைப்படங்கள், முற்றங்கள் ஆகிய அம்சங்கள் எல்லாம் நான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்குள் என்னைப் பொருத்திக்கொள்ள உதவின.
"ஒரு பாடல் காட்சியை அக்கிராமத்துக்கு அருகே உள்ள அருவிப் பகுதியில் படமாக்கினர். அப்படிப்பட்ட இடங்களை திரைப்படங்களில்தான் பார்த்திருக்கிறேன். எனவே, அங்கு நடந்த படப்பிடிப்பு என்னை மேலும் உற்சாகப்படுத்தியது," என்கிறார் காஷ்மீரா.
கதைப்படி இவர், மதுரைப் பெண்ணாக நடிக்கிறாராம். மதுரை வட்டார மொழி, உடல்மொழியை தம் நடிப்பில் கொண்டுவர சிரமப்பட்டதாகவும் நீளமான வசனங்களைப் பேச தடுமாறியதாகவும் சொல்கிறார்.
"எனினும் நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத் என மூத்த நடிகர்கள் உடன் இருந்ததால் எப்படியோ சமாளித்துவிட்டேன். சின்னப் பெண், தமிழ் மொழியும் தெரியாது என்பதால் மூத்த கலைஞர்கள் எனக்கு பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்தனர். அதனால் தொடர்ந்து இழுத்தடிக்காமல் எப்படியோ நடித்து முடித்தேன்," என்று சொல்லும் காஷ்மிரா, பொள்ளாச்சி வட்டாரத்தில் தயாரிக்கப்படும் காப்பிக்கு அடிமையாகி விட்டாராம்.
அதுபோன்ற சுவையான காப்பியை உலகின் வேறு எந்த இடத்திலும் ருசிக்க இயலாது என்கிறார்.
"நான் கடும் உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறேன். பொள்ளாச்சியில் கிடைக்கும் உள்ளூர் உணவை ருசிக்க முடியாமல் தவித்தேன். படக்குழுவில் இருந்த மற்ற அனைவரும் தினமும் வெளுத்துக் கட்டினர்.
"நான் எப்போதும் பாலும் சீனியும் இல்லாத காப்பிதான் அருந்துவேன். ஆனால், பொள்ளாச்சியில் கிடைத்த 'ஃபில்டர்' காப்பி என் மனதை மாற்றிவிட்டது. அந்தக் காப்பியைப் பருகினால் அப்படியோர் உற்சாகம் கிடைக்கும். மொத்தத்தில் 'அன்பறிவு' படம் தந்த அனுபவங்களை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது," என்கிறார் காஷ்மிரா.
, :
காஷ்மிரா பர்தேசி

