தினமும் தற்காப்புக் கலை தொடர்பான பயிற்சிகளை மேற்கொள்கிறார் நிவேதா பெத்துராஜ். இப்போது கார் ஓட்டும் பந்தயங்களில் கவனம் செலுத்துகிறார்.
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துக்குப் பிறகு தொழில்முறை கார் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர் நிவேதா தான்.
ஏதோ மேம்போக்காக தமக்கும் ஆர்வம் உள்ளதாகச் சொல்லாமல், உண்மையாகவே கடந்த 2014ஆம் ஆண்டு 'டாட்ஜ் சேலஞ்சர்' என்ற விளையாட்டுத்துறையில் பயன்படுத்தப்படும் கார் ஒன்றை வாங்கியுள்ளார் நிவேதா. அப்போது துபாயில் இருந்தாராம்.
"துபாயில் 'ஸ்போர்ட்ஸ்' கார் வாங்கிய இரண்டாவது பெண் நான்தான். இதை விளையாட்டாகச் சொல்லவில்லை. இதுதான் உண்மை. இது எனது கனவுக்கார்.
"எனக்குப் பல்வேறு துறைகளில் ஈடுபாடு உண்டு. கார்கள் மீது சிறு வயது முதலே தீராத காதல். பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டில் ஒரு நவீன ரக 'ஸ்போர்ட்ஸ்' கார் வாங்கினார்கள். அப்போதே அதன் மீதான ஈர்ப்பும் ஏக்கமும் மனதில் ஏற்பட்டது. எப்படியாவது நாமும் அதேபோன்று ஒரு கார் வாங்க வேண்டும் என மனதளவில் தீர்மானித்துவிட்டேன்.
"நான் வளர்ந்து ஆளாகி சம்பாதிக்கத் தொடங்கிய பிறகே கார் வாங்கும் ஆசை நிறைவேறியது. இப்போதும் அந்தக் காரை பத்திரமாக வைத்து பராமரிக்கிறேன்," என்று சொல்லும் நிவேதா, துபாயில் நடக்கும் கார் நிறுவனங்களின் கண்காட்சிகள், விளம்பர நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்பாராம்.
அது மட்டுமல்ல, உலகளவில் பிரபலமாக உள்ள நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் தற்காலிக ஊழியராகப் பங்கேற்று ஏதாவது வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தால் அதையும் செய்வாராம்.
ஒருமுறை சென்னை அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டை கார் பந்தய தடத்தில் நடைபெற்ற போட்டியைக் காணச் சென்றுள்ளார் நிவேதா. அப்போது முன்னணி நிறுவனத்தின் காரை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததாம். சில நிமிடங்கள் அந்தக் காரை ஓட்டியபோதுதான் தமக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் கார் பந்தய வீராங்கனை விழித்துக்கொண்டதாகச் சொல்கிறார்.
"உடனடியாக கோவையில் உள்ள தனியார் கார் 'ரேஸிங்' பயிற்சி நிலையத்தில் மாணவியாகச் சேர்ந்துவிட்டேன். அந்தச் சமயத்தில் அங்கு பயிற்சி பெற்ற ஒரே பெண் நானாகத்தான் இருப்பேன். இப்போது கார் பந்தயங்களில் பங்கேற்பது குறித்து ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறேன்.
"பயிற்சியின் போது நிறைய தவறுகளைச் செய்திருக்கிறேன். ஆனாலும் எனது பயிற்சியாளர்கள் அசராமல் எனக்குப் பலமுறை சொல்லிக் கொடுத்து ஊக்கமளித்தனர்," என்று நன்றியோடு குறிப்பிடுகிறார் நிவேதா.
இப்போது பந்தய கார்களை இயக்குவதில் முதல்கட்ட பயிற்சியை வெற்றிகரமாக முடித்திருக்கும் இவர், அடுத்தகட்டப் பயிற்சியை எதிர்நோக்கி உள்ளார். இந்தத் துறையில் சாதிக்க வேண்டும் எனும் வேகமும் லட்சியமும் கொஞ்சம்கூட குறையவில்லை என்கிறார்.
"தொடக்க நிலை பயிற்சியை மட்டுமே நிறைவு செய்துள்ளேன். பல வளைவுகளுடன் கூடிய 2.7 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஒரு தடத்தை என்னால் 1.32 விநாடிகளில் கடக்க இயலும். பயிற்சிக்கு முன்பு இது மேலும் பல விநாடிகள் அதிகமாக இருந்தது. சராசரியாக சுமார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் கார் ஓட்டுவேன். அதிலும், என்னுடைய 'டாட்ஜ்' காரில் 220 கிலோ மீட்டர் வேகத்தை தொட்டிருக்கிறேன்.
"எனக்கு இருசக்கர வாகனங்கள் மீதும் ஆர்வம் இருப்பதாக சிலர் கூறிக்கொண்டிருக்கின்றனர். உண்மையில் அது தவறான தகவல். இரு சக்கர வாகனங்களை ஓட்ட ரொம்ப பயப்படுவேன். கார் ஓட்டுவதில்தான் எனக்கு விருப்பம். அது பாதுகாப்பானது என்றும் கருதுகிறேன்," எனச் சொல்லும் நிவேதாவுக்கு, கார் பந்தயம் தொடர்பான திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.
எனினும் முறையான பயிற்சி, ஒத்திகைக்குப் பிறகே அத்தகைய படத்தில் நடிப்பாராம். இதற்கு முன்பு நடித்த படத்தில் கார், பைக் ஓட்டியபோது பலமாக அடிபட்டு, காயங்கள் ஏற்பட்டதாகச் சொல்கிறார். இவருக்குப் பிடித்தமான 'எஃப் 1' வீரர் லூயிஸ் ஹாமில்டனாம்.
, :
நிவேதா பெத்துராஜ்

