சுந்தர் பாலு தயாரித்து இயக்கும் படம் 'கன்னித்தீவு'. வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி என நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
மேலும் மொட்டை ராஜேந்திரன், சூப்பர் சுப்பராயன், சர்மிளா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
வட சென்னையில் உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கும் நான்கு பெண்களை மையப்படுத்திய கதை இது.
சிறு வயதில் இருந்தே தோழிகளான வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா ஆகிய நான்கு பேரும் சமூக அக்கறை உள்ளவர்கள்.
"உலகத்தைக் காப்பாற்ற முடியாவிட்டாலும் தாங்கள் வசிக்கும் இடத்தையாவது நன்றாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
"இந்நிலையில் வட சென்னையில் நீண்ட நாள்களாக நீடிக்கும் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக போராட்டத்தில் ஈடுபடும் அவர்களுக்கு அப்பகுதி மக்களின் ஆதரவும் கிடைக்கிறது. போராட்டமும் வெற்றி பெறுகிறது.
"ஆனால், நால்வரும் சில திடீர் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் தோழிகள் நால்வரும் அல்லாடுகிறார்கள்.
"முதலில் அச்சமடையும் அவர்கள், பிறகு தாங்கள் எதிர்கொள்ளும் புதிய போராட்டத்திலும் வெற்றி பெறுகிறார்கள். இதை அடிதடி, கீழ்த்தட்டு மக்களின் பிரச்சினைகள் ஆகியவற்றுடன் சொல்லப் போகிறோம்.
"படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதிவரை விறுவிறுப்பாக இருக்கும். தேவையயற்ற வசனங்கள், காட்சிகள் எதுவும் இருக்காது," என்கிறார் இயக்குநர் சுந்தர் பாலு.
படத்தின் தலைப்புக்கு ஏற்ப இறுதிக்காட்சியை ஒரு தீவில்தான் படமாக்கினார்களாம். மேலும் பெரும் பொருட்செலவில் நான்கு சண்டைக் காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.
"பொதுவாக பெரிய நாயகர்கள் நடிக்கும் படங்களில்தான் சண்டைக் காட்சிகளுக்காக பெரிய தொகை செலவிடப்படும். ஆனால் இந்தப் படத்திலும் அப்படிப்பட்ட காட்சிகள் இடம்பெறுகின்றன.
"நாயகிகள் நால்வருமே தைரியமாக நடித்தனர். கேரளாவில் படமாக்கப்பட்ட இரண்டு சண்டைக் காட்சிகளும் ரசிக்கும்படியாக இருக்கும்," என்கிறார் சுந்தர் பாலு.
ஊரடங்கு முழுமையாக முடிவுக்கு வந்த பிறகு இப்படம் வெளியாகும் எனத் தகவல்.

