நல்ல புத்தகங்கள் வாசியுங்கள்
படப்பிடிப்புகள் முழு வீச்சில் தொடங்காத நிலையில், கிடைத்த ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி நிறைய புத்தகங்களை வாசித்து வருகிறார் அமலா பால்.
அத்துடன் நிற்காமல் அந்தப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள நல்ல கருத்துகள், சிந்தனைகளை சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து கொள்கிறார்.
தாம் படிக்கும் புத்தகங்களின் முதல் பக்கத்தைப் படம் பிடித்து தமது பதிவுடன் சேர்க்கும் அமலா, தனது ரசிகர்களும் அப்படிப்பட்ட புத்தகங்களைப் படித்துப் பயனடைய வேண்டும் என அறிவுறுத்தவும் தவறுவதில்லை.
தற்போது 'அதோ அந்தப் பறவை போல' உள்ளிட்ட மூன்று படங்களில் நடித்து வருகிறார் அமலா பால்.
தனுஷுக்கு ஜோடியாகும் பிரியா
மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் தனுஷ் நாயகனாக நடிப்பது உறுதியாகியுள்ளது. இரண்டு நாயகிகள் கொண்ட இக்கதையில் ஹன்சிகாவை ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துவிட்டனர்.
இந்நிலையில் மற்றொரு நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாகத் தகவல்.
ஏற்கெனவே ஜெயம் ரவியுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கும் பிரியா, இப்போது தனுஷ் படத்திலும் நடிக்க உள்ளார்.
சங்கர், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி
முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர் சங்கர் படத்துக்கு கதை எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்து ராம்சரண் நாயகனாக நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்க உள்ளார் சங்கர். இதற்குத்தான் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ளாராம். இது முழுக்க அரசியல் சம்பந்தப்பட்ட கதை என்பதுடன், சங்கர் முதன்முறையாக வேறொருவரின் கதையை இயக்க உள்ளார்.
படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்துக்காக சங்கர் பெரும் தொகையை சம்பளமாகப் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

