இடைவிடாத சினிமா பணிகளுக்கு மத்தியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளார் விஜய் சேதுபதி.
சமையல் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு கிடைப்பதால் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் பிரபலங்களை வைத்து அத்தகைய நிகழ்ச்சிகளைத் தயாரிக்கின்றன.
அந்த வகையில், சன் டிவி தயாரிக்கும் 'மாஸ்டர் செஃப்' என்ற நிகழ்ச்சியை வழிநடத்த உள்ளார் விஜய் சேதுபதி. இப்படியொரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு தொடக்கத்தில் மிகவும் தயங்கினாராம் சேதுபதி. ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.
"அவருடைய அணுகுமுறை பிடித்திருந்தது.
"என் மனதுக்குப் பிடிக்கவில்லை என்றால் கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்தாலும் வேலை பார்க்க மாட்டேன். என் மனதுக்குச் சரியெனப் பட்டதால் இந்த வாய்ப்பை ஏற்றேன்.
"கால்ஷீட் கொடுப்பதெல்லாம் பெரிய விஷயமே அல்ல. நான் எதையும் திட்டமிட்டுச் செய்வதில்லை. வாழ்க்கை அதன் போக்கில் சிக்கலின்றி போகிறது," என்கிறார் சேதுபதி.
திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் தொழில் ரீதியில் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று சொல்பவர், மக்களுடன் நெருங்க இதுபோன்ற நிகழ்ச்சிகள் கைகொடுக்கும் என்கிறார்.
"சமையலை விரும்பும், அதை ரசித்துச் செய்யும் சாமானியர்கள்தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். ஆட்டம் பாட்டம் என்று கலகலப்பாக இருக்கும். ஆனால் சமையல் என்று வந்துவிட்டால் கவனமாகவும் முழு ஈடுபாட்டுடனும் இருக்க வேண்டும். இதுதான் நிபந்தனை.
"இந்த நிகழ்ச்சி முடியும்போது வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமல்ல, பங்கேற்ற அனைவருக்குமே ஏதேனும் புது அனுபவம் கிடைக்கும் என நம்புகிறேன்," என்று சொல்லும் விஜய் சேதுபதி, நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள அரங்கம் தம்மை வெகுவாகக் கவர்ந்திருப்பதாகச் சொல்கிறார்.
விளக்குகளைக் கூட வித்தியாசமான கோணத்தில் அமைத்துள்ளதாகவும் நிறைய பாத்திரங்கள், பாக்கு மட்டை மரம், குதிரை சிலை என அரங்கில் இடம்பெற்றுள்ள அனைத்துமே அழகாக இருப்பதாகக் கூறுகிறார்.
திரையுலகில் பிரபலமாகும் முன்னர், சென்னையில் உள்ள துரித உணவகம் ஒன்றில் வேலை பார்த்த அனுபவம் சேதுபதிக்கு உண்டு. மாலை ஆறு மணியில் இருந்து இரவு 12 மணி வரை வேலை பார்த்துள்ளார். அதனால் உழைப்பு, உணவின் அருமை தமக்கு நன்கு தெரியும் என்கிறார்.
"சாப்பாடு குறித்து பேசினால் என் வாழ்க்கையில் எதிர்கொண்ட பல அனுபவங்களைக் குறிப்பிட வேண்டியிருக்கும். ஐந்து வயது வரை வீட்டில் வறுமை. பள்ளியில் அரசு வழங்கும் சத்துணவைச் சாப்பிட்டிருக்கிறேன். சில நாள்கள் இரவு சாப்பிடாமலேயே தூங்கியதுண்டு.
"துபாயில் வேலை பார்த்த போது வீட்டுக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்பதால் கணக்குப் பார்த்து சாப்பிட்டிருக்கிறேன். அதனால் இப்போது என் கண் முன்னே யாராவது உணவை வீணடித்தால் சட்டெனக் கோபம் வந்துவிடும்," என்று சொல்லும் சேதுபதி, தாம் வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து தற்போதுள்ள நிலையை அடைந்திருப்பதாகச் சொல்கிறார்.
இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக வெளியூர், வெளிநாட்டில் தங்க வேண்டியிருந்தால் குடும்பத்தைப் பிரிந்திருக்க மாட்டாராம்.
"ஏதாவது ஏற்பாடு செய்து மனைவி, பிள்ளைகளையும் நான் இருக்கும் இடத்துக்கு வரவழைத்துவிடுவேன். அவர்களைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது.
"தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பெங்களூவில்தா ன் படப்பிடிப்பு நடக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் வந்தபோது அங்குள்ள கப்பன் பூங்காவை நடந்தே சுற்றிப் பார்த்தேன். இப்போது நான் தங்கியுள்ள நட்சத்திர தங்கும் விடுதியில் இருந்து பார்க்கும்போது உற்சாகமாக இருக்கிறது. வாழ்க்கை எப்படி மாறும் என்பதை நாம் தீர்மானிக்க இயலாது," என்கிறார் விஜய் சேதுபதி.
, :
விஜய் சேதுபதி

