ஊரடங்கின்போது திரையுலகத் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் 'நவரசா' எனும் 'ஆந்தாலஜி' வகை திரைப்படம் ஒன்றை தன் நண்பருடன் இணைந்து தயாரித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
கொரோனா நெருக்கடியால் திரையுலகம் அதிகம் பாதிக்கப்படும் என்பதை முன்கூட்டியே கணித்து இந்த முயற்சியில் ஈடுபட்டதாகச் சொல்லும் மணிரத்னம், இவ்விஷயத்தில் தமக்கு திரையுலகத்தினரின் ஆதரவும் கிடைத்தது என்கிறார்.
தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் வங்கி அட்டை போன்று ஓர் அட்டை தரப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1,500 ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருள்களை வாங்க அந்த அட்டையைப் பயன்படுத்தலாம். சுமார் 12,000 தொழிலாளர்கள் இதன் மூலம் பயன் அடைந்துள்ளனர்.
நேரடியாக இணையத்தளம் மூலம் படங்களை வெளியிடுவது நல்லதொரு முன்னேற்றம் என்று சொல்லும் மணிரத்னம், படைப்பாளிக்கு சுதந்திரம் அளிக்கும் தளமாக 'ஓடிடி'யைப் பார்ப்பதாக கூறுகிறார்.
"'நவரசா' படத்தை 'ஓடிடி'க்காகவே உருவாக்கினோம். இந்தப் படம் மறக்க முடியாத அனுபவங்களைத் தந்துள்ளது. ஒன்பது இயக்குநர்கள், ஒன்பது கதைகள் என்பது சாதாரண விஷயமல்ல.
"இயக்குநர்கள் தேர்ந்தெடுத்த நடிகர், நடிகைகளை ஒப்பந்தம் செய்வது, ஒன்பது கதைகளையும் படித்துப் பார்த்து மெருகேற்றுவது, இயக்குநர்களுடன் கலந்து பேசுவது என்று பல்வேறு பணிகளைச் செய்ய வேண்டியிருந்தது.
"உண்மையில் இந்த அனுபவம் புதிதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது," என்கிறார் மணிரத்னம்.
மனித வாழ்க்கை நவரசங்கள் நிறைந்தது என்று குறிப்பிடுபவர், அந்த ஒவ்வொரு ரசத்தையும் அடிப்படையாகக் கொண்ட கதைகளை ஒன்பது இயக்குநர்கள் தங்களுக்கே உரிய முறையில் இயக்கி உள்ளனர் என்கிறார்.
"ஒவ்வொரு இயக்குநரும் தங்களுக்கென ஒரு பாணியை உருவாக்கி உள்ளனர். உதாரணமாக, கௌதம் மேனன் காதல் படங்களை கையாள்வதில் கெட்டிக்காரர். அதை இம்முறையும் நிரூபித்துள்ளார்.
சூர்யாவும் ப்ரயாகா ரோஸ் மார்ட்டினும் அவரது இயக்கத்தில் நடித்துள்ளனர்.
"இயக்குநர் பிரியதர்ஷன் நகைச்சுவையைக் கையாண்டுள்ளார். அவர் இயக்கிய பகுதியில் யோகிபாபு, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
"'கருணை'யை மையமாக வைத்து பிஜாய் நம்பியார் இயக்கிய பகுதியில் விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், ரேவதி, அசோக் செல்வன் என ஓர் அணி அசத்தி உள்ளது," என்று இந்தப் படம் உருவான விதத்தை ஆர்வத்துடன் விளக்குகிறார் மணிரத்னம்.
ஒன்பது கதைகளுக்கும் மிக பொருத்தமான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடும் மணிரத்னம், இதுபோன்ற முயற்சிகளும் படைப்புகளும் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு மிக அவசியம் என்கிறார்.
'ஆச்சரியம்' என்ற ரசத்தை விளக்கும் வகையில் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள பகுதி மிக வித்தியாசமான முயற்சியாக இருக்கும் என்று பாராட்டும் மணிரத்னம், இந்த பகுதியில் அரவிந்த்சாமி, பிரசன்னா, பூர்ணா ஆகியோரின் நடிப்பு மறக்க முடியாததாக இருக்கும் என்கிறார்.
அரவிந்த்சாமியும்கூட தன் பங்குக்கு கோப உணர்ச்சியை மையப்படுத்தி ஒரு பகுதியை இயக்கி உள்ளார். மேலும், கார்த்திக் சுப்புராஜ் 'அமைதி' என்ற தலைப்பிலும் ரவீந்திரன் (பயம்), சர்ஜுன் (தைரியம்) வசந்த் (அருவெறுப்பு) என தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர்.
"இது சினிமாவுக்காகவும் அதன் தொழிலாளர்களுக்காகவும் சினிமாக்காரர்களே உருவாக்கிய படங்கள்," என்கிறார் மணிரத்னம்.

