திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருப்பதாகச் சொல்கிறார் காஜல் அகர்வால்.
தொழிலதிபரான கணவர் கௌதம், கொரோனா நெருக்கடி, ஊரடங்கு காரணமாக வீட்டில்தான் பெரும்பாலான நேரம் இருக்கிறாராம். அதனால் அவருடன் சேர்ந்து பொழுதைக் கழிக்க கிடைத்துள்ள வாய்ப்பு எதிர்பாராமல் கிடைத்த பரிசு என்கிறார்.
திருமணத்துக்குப் பிறகும் நடிக்கிறீர்களே? என்று யாராவது கேள்வி எழுப்பினால் காஜலுக்கு சட்டென கோபம் வருகிறது.
"திருமணத்துக்கு முன்பு, அதற்குப் பிறகு என வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கருதவில்லை. நானும் பெரிதாக மாறிவிடவில்லை. வழக்கம்போல் என் வேலைகளைச் செய்கிறேன். வீட்டுத் தேவைகளையும் கவனிக்கிறேன். கொஞ்சமாக பொறுப்புகள் கூடியுள்ளன என்று சொல்லலாம்," என்கிறார் காஜல்.
திருமணமாகும் கதாநாயகிகளுக்கு வாய்ப்புகள் குறைந்துவிடும் என்பதில் தமக்கு அறவே உடன்பாடு இல்லை என்று குறிப்பிடுபவர், இன்றைய தலைமுறையினர் பழைய நடைமுறைகளை எல்லாம் மாற்றி அமைத்து வருவதாகச் சொல்கிறார்.
"உங்களுக்குத் திருமணமாகிவிட்டது என்றால் வேலை செய்வதை விட்டுவிடுவீர்களா? அப்படியானால் நடிகைகள் திருமணம் குறித்து யோசிக்கவே கூடாதா?" என்று காஜலிடம் இருந்து எதிர்கேள்விகள் எழுகின்றன.
இவர் சினிமா துறைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகின்றன. பல வெற்றிப்படங்களில் நடித்து இருப்பவருக்கு நாயகியை மையப்படுத்தும் முழு நீள சண்டைக் காட்சிகள் கொண்ட படத்தில் நடிக்க ஆசையாம்.
"ஆமாம்... திரையில் அதிரடியாக சண்டைபோட விரும்புகிறேன். சவாலான காட்சிகள் மூலம் எனது உடல்நிலை கட்டுக்கோப்பாக உள்ளதா என அறிய வேண்டும். மேலும், அப்பாவியான, மென்மையான பாத்திரங்களில் மட்டுமே என்னைப் பார்த்து வந்த ரசிகர்களுக்கும் திரையில் நான் வித்தியாசமாக காட்சியளிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
நடன இயக்குநர் பிருந்தா இயக்குநராக அறிமுகமாகும் 'ஹே சினாமிகா' படத்தில் காஜல்தான் கதாநாயகி. துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கிறார்.
கல்யாண் இயக்கத்தில் உருவாகி உள்ள 'கோஷ்டி', 'பாரிஸ் பாரிஸ்' உள்ளிட்ட படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.
"பிருந்தா மாஸ்டர் நிறைய அனுபவம் உள்ளவர். நீண்டகாலமாக அவருடன் பணியாற்றி வருகிறேன். எனக்கு ஏற்ற மாதிரி நடன அசைவுகளை அமைப்பார். அதனால் அவருடன் இணைந்து செயல்படுவது உற்சாகமாக இருக்கும். அவர் 'ஹே சினாமிகா' மூலமாக இயக்குநரானதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்தப் படத்தில் எனக்கு மனோதத்துவ நிபுணர் கதாபாத்திரம்.
"அதேபோல், 'கோஷ்டி' படம் ரசிகர்களை நிச்சயம் சிரிக்க வைக்கும். தலைப்பைக் கேட்டதும் அரசியல் படம் என்று நினைக்கத் தோன்றும். உண்மையில் இது முழு நீள நகைச்சுவைப் படம். 'ஜில்லா' படத்துக்குப் பிறகு மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளேன்.
"நகைச்சுவைப் படங்கள் ரொம்பப் பிடிக்கும். படப்பிடிப்பின்போது இடைவிடாமல் சிரித்ததில் வயிற்று வலியே வந்துவிட்டது. யோகி பாபு அந்த அளவுக்கு சிரிக்க வைத்தார்," என்று விவரிக்கும் காஜல், அடுத்து இயக்குநர் டிகே இயக்கும் திகில் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதுவரை இந்தியில் வணிக அம்சங்கள் நிறைந்த படங்களில் மட்டுமே நடித்துள்ளார் காஜல். இப்போது முதன்முறையாக 'உமா' என்ற தலைப்பில் நாயகியை மையப்படுத்தி உருவாகும் படத்தில் நடிக்கிறாராம்.

