டாப்சியின் தயாரிப்பாளர் அவதாரம்
நடிகை டாப்சி தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
தாம் தொடங்கியுள்ள நிறுவனத்துக்கு 'அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்' என பெயர் சூட்டியுள்ளார்.
"சினிமா மீதான எனது அன்பை வெளிப்படுத்து வதற்காக இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளேன். எனது 11 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் ரசிகர்கள் எனக்கு நிறைய அன்பையும் ஆதரவையும் அளித்துள்ளனர்.
"என்னைப்போல் எந்த பின்னணியும் இன்றி வந்து சினிமாவில் சாதிக்க துடிப்பவர்களுக்கு எனது பட நிறுவனத்தில் வாய்ப்பளிக்க உள்ளேன்," என்கிறார் டாப்சி.
துப்பறியும் நிபுணராக நடிக்கும் ராஷி
ராஷி கண்ணாவுக்கு தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், இந்தியிலும் ஓரளவு வாய்ப்பு கிடைத்து வருகிறது.
தற்போது ராஜ் - டிகே இயக்கத்தில் உருவாகி வரும் இந்தி இணையத் தொடரில் ராஷியை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதில் முதல் முறையாக துப்பறியும் நிபுணராக நடிக்க உள்ளாராம். அதற்கான பயிற்சியாக நிறைய துப்பறியும் சம்பவங்களைக் கொண்ட புத்தகங்களை வாசிப்பதாகச் சொல்கிறார் ராஷி.
நல்ல கதைகள் அமைந்தால் தொடர்ந்து இணையத் தொடர்களில் நடிப்பது என முடிவு செய்துள்ளாராம். இத்தகைய தொடர்களில் நடிக்க மற்ற நடிகைகளைவிட ராஷி குறைவான சம்பளம் பெறுவதாகத் தகவல்.

