தந்தையின் மறைவுக்குப் பிறகே வாழ்க்கையைப் புரிந்து கொள்ளத் தொடங்கியதாகச் சொல்கிறார் அமலா பால்.
2020ஆம் ஆண்டு தமது வாழ்க்கையில் மறக்கவே இயலாத ஆண்டு என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நான் 17 வயதில் சினிமா துறைக்கு வந்தேன். சொந்த வாழ்க்கையில் சந்தித்த விஷயங்களை எல்லாம் சினிமா வாழ்க்கையிலும் பார்த்தேன்.
"சினிமா வாழ்க்கையை என்னால் சொந்த வாழ்க்கையில் இருந்து பிரித்துப் பார்க்க முடியவில்லை. இரண்டுமே ஒன்றுதான் எனக் கருதினேன். அது தவறான அணுகுமுறை என்று தோன்றியதே இல்லை.
"2019ஆம் ஆண்டு வரை அப்படித்தான் இருந்தேன். ஆனால் அடுத்த ஆண்டு நிகழ்ந்த சில விஷயங்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. அந்த வருடம்தான் எனது தந்தை மரணம் அடைந்தார். அவரது மறைவுக்குப் பிறகுதான் என்னை நானே சுயபரிசோதனை செய்ய ஆரம்பித்தேன்," என்கிறார் அமலா பால்.
அவ்வாறு சுயபரிசோதனையை தொடங்கியபோதுதான் தமது சொந்த வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் போல் இருப்பதை உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதுவரை தமக்கென தனிப்பட்ட வாழ்க்கை இல்லை என்பதையும், வாழ்க்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு இருப்பதையும் உணர ஆரம்பித்ததாகச் சொல்கிறார்.
"கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கையில் மோசமாக உணர்கிறேன். தற்போது எனது சொந்த வாழ்க்கையையும் சினிமா வாழ்க்கையையும் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
"அனைவரும் தங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் போய் இருக்கிறார்கள். நானும் போக வேண்டும். அதற்கு நான் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
"2019ஆம் ஆண்டு வரை வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இல்லாமல் போன எனக்கு அப்பாவின் மரணம்தான் கண்களைத் திறந்து வைத்த நிகழ்வாக மாறியது. நான் சிலவற்றைச் சரியாகச் செய்திருப்பதாகத் தோன்றுகிறது.
"ஆனால் அதையும் மீறி வாழ்க்கையை என்னால் சரியான கோணத்தில் புரிந்துகொள்ள முடியாமல் போனது என்பதை உணர்ந்தேன்," என்று அமலா பால் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இவரும் இணையத் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். இணையத் தொடர்கள் மூலம் ஏராளமான திறமைசாலிகள் வெளிஉலகத்துக்குத் தெரிய வருவதாகவும் சொல்கிறார்.
தெலுங்கில் அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள தொடர் 'குடியடமைத்தே'.
ராம் விக்னேஷ் இயக்கியுள்ள இத்தொடரில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.
அமலாவுடன் ஈஸ்வர் ரச்சிராஜு, ப்ரதீப் ருத்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி உள்ளது.
இனி சினிமாவைப் போல் இணையத் தொடர்களிலும் தம்மை அதிகம் காண முடியும் என்கிறார் அமலா பால்.

