உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய 'பாகுபலி' திரைப்படம் இணையத் தொடராக தயாரிக்கப்பட உள்ளது.
எனினும், அப்படத்தின் முதல் இரண்டு பாகங்களுக்கும் 'பாகுபலி' இணையத் தொடருக்கும் இடையே எந்தவித தொடர்பும் இருக்காதாம்.
இந்த தொடரின் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது.
2015ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' முதல் பாகம் விமர்சன ரீதியிலும் வசூல் அளவிலும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இதையடுத்து 2017ஆம் ஆண்டு அப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி சாதனை படைத்தது.
இந்நிலையில், 'பாகுபலி' கதையை மையமாக வைத்து இணையத் தொடர் ஒன்றைத் தயாரிக்க உள்ளனர். இதுவும் ராஜமௌலி இயக்கத்தில்தான் உருவாகிறது எனத் தகவல்.
இந்தத் தொடரில் நயன்தாராவும் இணைவார் எனத் தெரிகிறது.
'பாகுபலி'யில் ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த சிவகாமி தேவி என்ற ராஜமாதா கதாபாத்திரம் தனித்துவம் வாய்ந்தது.
"சிவகாமியின் இளமைப் பருவத்தை மையமாக வைத்து ராஜ மௌலி மிகுந்த சுவாரசியத்துடன் கூடிய திரைக்கதையை அமைத்துள்ளாராம். இதுதான் தற்போது இணையத் தொடராக உருவாகிறது.
சிவகாமி எவ்வளவு வீரமான பெண், அவர் தன் மக்களுக்காக துணிச்சலுடன் எதிர்கொண்ட சவால்கள், எதிரிகளை வென்ற தருணங்கள் ஆகியவற்றை விளக்கு வதாக இந்த இணையத் தொடர் உருவாக்கப்படும் என்றும் சிவகாமி தேவி கதாபாத்திரத்துக்கு நயன்தாரா தான் பொருத்தமாக இருப்பார் என்று தயாரிப்புத் தரப்பு கருதுவதாகவும் அண்மையில் ஒரு தகவல் வெளியானது.
இந்நிலையில், நயன்தாராவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை நல்லவிதமாக முடிந்துள்ளதாம். எட்டு பாகங்கள் கொண்ட இந்த இணையத் தொடரில் நடிக்க, மூன்று திரைப்படங்களுக்கு நயன்தாரா பெறக்கூடிய சம்பளத்துக்கு இணையாக பெருந்தொகையை வழங்க தயாரிப்புத் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளதாம்.
வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை துவங்க உள்ளனர். அனேகமாக அடுத்த ஆண்டு மத்தியில் 'பாகுபலி' இணையத் தொடர் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஜல், தமன்னா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நாயகிகள் பலர் இணையத் தொடர்களில் நடித்து வருகின்றனர். தற்போது நயன்தாராவும் அவர்களுடன் இணைய உள்ளார்.
"நயன்தாரா வருகையால் 'ஓடிடி' தளங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
"அதேசமயம் கலைஞர்களும் அதிக சம்பளத்தை எதிர்பார்க்கலாம். 'பாகுபலி'யின் இரண்டு பாகங்களுக்கு முன்னர் என்னவெல்லாம் நடந்தன என்பதை அறிய ரசிகர்களும் ஆவலாக இருப்பார்கள். இந்த இணையத் தொடர் உலக ரசிகர்களையும் எளிதில் சென்றடையும் என நம்பலாம்," என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

