இயக்குநர் அறிவழகனும் அருண் விஜய்யும் 'பார்டர்' படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இம்முறை உளவுத்துறை, ராணுவம், எல்லைப் பிரச்சினை குறித்து அலசுகிறார் அறிவழகன்.
'ஈரம்', 'வல்லினம்', 'ஆறாது சினம்' என்று வித்தியாசமான கதைக்களங்களைக் கையாள்வதில் கெட்டிக்காரரான இவர், நீண்ட நாள்களாகவே ராணுவப் பின்னணி கொண்ட ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டு வந்தாராம். அதற்கான நேரம் இப்போதுதான் கைகூடியுள்ளது என்கிறார்.
"அருண் விஜய்யும் நானும் நல்ல நண்பர்களாகப் பழகி வருகிறோம். ஒரு கதாநாயகன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பார்.
"அடிதடி, காதல், நகைச்சுவை, பிரம்மாண்டப் படைப்பு என எத்தகைய கதைக்களமாக இருந்தாலும் கொஞ்சம் கூட யோசிக்காமல், தயங்காமல் அவரை ஒப்பந்தம் செய்யலாம். காரணம், அவர் அப்படிப்பட்ட ஒரு திறமைசாலி.
"எனக்கு என்ன தேவை என்பது அவருக்குத் தெரியும். அவரை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சூட்சமம் எனக்கு அத்துப்படி. அவரது நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும்," என்கிறார் அறிவழகன்.
'குற்றம் 23' பட வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணைந்து செயல்பட வேண்டும் என இருவரும் முடிவு செய்துவிட்டனர். அதன் பிறகு தனக்குத் தேவைப்பட்ட கால அவகாசத்தை எடுத்துக் கொண்டு 'பார்டர்' படக்கதையை உருவாக்கி உள்ளார் அறிவழகன்.
"இந்தப் படத்தில் இந்திய அரசாங்கத்தின் உளவாளியாக நடித்துள்ளார் அருண் விஜய். கடந்த ஆண்டு மார்ச் மாதமே படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. புதுடெல்லியில் படப்படிப்பு நடந்து கொண்டிருந்தபோதுதான் கொரோனா நெருக்கடி தலைதூக்கியது. இதனால் மிக வேகமாக காட்சிகளை எடுத்து முடித்த கையோடு ஊர் திரும்பிவிட்டோம். அதற்கடுத்த இரு தினங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆறு மாத காத்திருப்புக்குப் பின்னர் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியபோது நிறைய கட்டுப்பாடுகள்.
"இதுவோ ராணுவம், உளவுத்துறை தொடர்பான கதை என்பதால் அடிதடி சண்டைக் காட்சிகளுக்குப் பஞ்சமே இருக்காது. ஆனால் அதிகப்படியான துணை நடிகர்கள், சண்டைக் கலைஞர்களை வைத்து வேலை செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. எப்படியோ சமாளித்து காட்சிகளைப் படமாக்கினோம். அருண் விஜய் உட்பட அனைவருமே மிகுந்த ஒத்துழைப்பை அளித்தனர். அதற்காக அனைவருக்கும் எனது நன்றி," என்கிறார் அறிவழகன்.
படத்தின் கதாநாயகி ரெஜினாவையும் வெகுவாகப் பாராட்டுகிறார். மிகச்சிறந்த நடிகை, அர்ப்பணிப்பான கலைஞர் என்று பாராட்டுப் பத்திரம் சற்று நீளமாகத்தான் இருக்கிறது.
"அடிதடி, வணிகப் படங்கள் என்றால் எனக்கு உடனே அருண் விஜய்யின் நினைவு வரும். அதேபோல் நடிகைகளில் ரெஜினாவின் முகம்தான் கண்முன்னே நிற்கும். இந்தப் படத்தில் அவரும் ஓர் உளவாளியாக நடித்துள்ளார். கதைப்படி, அருணுக்கு தேவையான உதவிகளைச் செய்வார். ரெஜினாவால் எந்தவொரு கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிக்க முடியும். அதிலும் அடிதடி படங்கள் என்றால் அவர் மிகப் பொருத்தமான தேர்வாக இருப்பார். கோடம்பாக்கத்து வணிக நாயகி என்று அவரைக் குறிப்பிடலாம்," என்று சொல்லிச் சிரிக்கிறார் அறிவழகன்.
'பார்டர்' படத்தில் நடிக்கும் மற்றொரு நாயகி ஸ்டெஃபி படேல். அழகிப் போட்டிகளில் பங்கேற்று அசத்தியவர். வெறும் காதல், பாட்டு, ஒப்புக்கு சில காட்சிகள் என்று வந்து போகாமல், முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளாராம்.
படம் எப்போது வெளியாகும்?
"நாங்கள் தயாராகத்தான் உள்ளோம். ஆனால் திரையரங்குகளில்தான் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதேசமயம் நாங்கள் 'ஓடிடி' தளங்களுக்கு எதிரானவர்கள் அல்ல.
"இன்றைய சூழ்நிலைக்கு இப்படிப்பட்ட புதிய களங்கள் தேவை. ஏராளமானோர் வீட்டில் இருந்தபடியே படம் பார்க்க விரும்புகிறார்கள். அதேசமயம் சில படங்களை திரையரங்கில் பார்ப்பதுதான் முழுமையான மனநிறைவைத் தரும். பார்டர் படத்தில் இந்திய தேசியக் கொடியில் உள்ள மூன்று நிறங்களும் காட்சிகளுடன் பயணம் செய்வதைப் பார்க்க முடியும். மூன்று பகுதிகளாக கதை நகரும்போது இந்த நிறங்களும் மாறுபடுவதை திரையரங்கில் பார்க்கும்போதுதான் தெளிவாக உணர முடியும். 'ஓடிடி' தளங்கள் படைப்பாளிகளுக்கு கூடுதல் சுதந்திரம் தருகின்றன. கருத்து சுதந்திரம் இருப்பதால் அவற்றின் வளர்ச்சியை நான் நல்லவிதமாகவே பார்க்கிறேன்," என்கிறார் இயக்குநர் அறிவழகன்.

