சில சறுக்கல்களைச் சந்தித்தாலும், தனக்குள்ள மதிப்பை குறைத்துக்கொள்ளக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
கோடம்பாக்கத்தைக் கடந்து இப்போது தெலுங்கு தேசத்திலும் தனது கொடியைப் பறக்கவிட்டுள்ளார்.
நீட்டி முழக்காமல் விஷயத்துக்கு வருவோம். தான் ஒப்பந்தமாகி உள்ள புதிய படத்துக்காக சிவகார்த்திகேயன் பெறப்போகும் சம்பளம் 25 கோடி ரூபாய்.
நீங்கள் மட்டுமல்ல, மொத்த கோடம்பாக்கமும் இத்தகவலைக் கேட்டு வாய் பிளந்துள்ளது. இயக்குநர் அனுதீப்பின் இயக்கத்தில் உருவாக உள்ள படத்துக்காகத்தான் கை நிறைய பணத்தை அள்ளப்போகிறார் சிவா என தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மைக்காலமாக தமிழில் உருவாகும் படத்தை உடனடியாக மொழி மாற்றம் செய்தோ, மறுபதிப்பாகவோ தெலுங்கில் வெளியிடுகின்றனர். இத்தகைய படங்களுக்கான வரவேற்பு நன்றாக உள்ளதாம். மேலும் வசூலும் குறைவின்றிக் கிடைக்கிறதாம்.
இதைக் கவனித்த பிரபல ஸ்ரீ வெங்கடேஸ்வரா படத் தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் அனுதீப்பை அழைத்துப் பேசியுள்ளது. புதுமுகங்களை வைத்து 'ஜாதி ரத்னாலு' என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் அனுதீப்.
நான்கு கோடி ரூபாய் செலவில் உருவான அந்தப் படம் அறுபது கோடி ரூபாய் வசூல் கண்டது. இதனால் ஒரே படத்தின் மூலம் பிரபலமாகிவிட்டார் அனுதீப்.
தயாரிப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிவகார்த்திகேயனைச் சந்தித்த அனுதீப், தாம் தயார் செய்துள்ள கதையைக் கூறியுள்ளார்.
சிவாவுக்கும் கதைபிடித்துப் போக உடனடியாக நடிக்க சம்மதித்துள்ளார்.
பிறகென்ன... ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நேரடிப் படமாக உருவாகிறது அனுதீப் சொன்ன கதை.
இதனால் சிவகார்த்திகேயனின் சம்பளமும் உயர்ந்திருக்கிறது. முதல் முறையாக 25 கோடி சம்பளத்தைத் தொட்டிருக்கிறார் சிவா.
இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் ஒரு படத்தைத் தயாரிக்கும்போது அதன் சந்தை மதிப்பு இந்திப் படங்களுக்கு இணையாக அதிகரிக்கிறதாம்.
மேலும், இந்தி வெளியீட்டு உரிமையும் சில கோடி கொட்டிக் கொடுக்கிறது என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

