மறுபதிப்பாகிறது 'காசேதான் கடவுளடா'
கடந்த 1972ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'காசேதான் கடவுளடா' படம் தமிழில் மறுபதிப்பாகிறது. இதற்கான உரிமையைப் பெற்றுள்ளார் இயக்குநர் கண்ணன்.
இதில் 'மிர்ச்சி' சிவா நாயகனாகவும் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடிக்கின்றனர்.
"கொரோனா விவகாரத்தால் மக்கள் வேதனையும் சலிப்பும் அடைந்துள்ளனர். இப்படிப்பட்ட நேரத்தில் நகைச்சுவையாக ஒரு படைப்பை தருவது மக்களின் மனதை மாற்றவும் உற்சாகம் அளிக்கவும் உதவும் என இயக்குநர் கண்ணன் கூறினார். பழம்பெரும் நடிகை லட்சுமி ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் நான் நடிக்க உள்ளேன். 'காசேதான் கடவுளடா' படத்தை இன்னும் ஐம்பது ஆண்டு களுக்குப் பிறகும்கூட பார்த்து ரசிக்க முடியும். இந்தப் படத்தில் நடிப்பதை பெருமையாகக் கருதுகிறேன்," என்கிறார் பிரியா.
பின்தொடரும் பத்து மில்லியன் பேர்
சத்தமின்றி ஒரு சாதனையை நிகழ்த்தி உள்ளார் தனுஷ்.
டுவிட்டர் தளத்தில் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பத்து மில்லியனைக் கடந்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தற்போது ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் இந்தியில் நடித்து வரும் 'அத்ரங்கி ரே' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படம் திரை காணும்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களுக்கு என குறிப்பிட்ட அளவிலான நேரத்தை ஒதுக்குவது என்றும் அதன் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பது என்றும் முடிவு செய்துள்ளாராம் தனுஷ்.

