"மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நான் நடிக்கும் புதுப்படம் வெளியானாலும் பரவாயில்லை. ஆனால் அந்தப் படத்தில் எனது நடிப்பு அனைவரையும் கவனிக்க வைக்கும் வகையில் இருக்க வேண்டும். எனக்கு எண்ணிக்கை முக்கியமே அல்ல," என்கிறார் துஷாரா.
இன்று வெளியாகும் 'சார்பட்டா பரம்பரை' படத்தின் நாயகி இவர்தான். இதற்கு முன்பு இவர் நடித்து வெளியான 'போதை ஏறி புத்தி மாறி' படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு இயக்குநர் பா. ரஞ்சித் பார்வையில் பட்டு, நடிப்பு, ஒப்பனைத் தேர்வுக்குப் பிறகு அவரது இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.
மீண்டும் வடசென்னையை மையப்படுத்தும் கதையுடன் களமிறங்கி உள்ளார் ரஞ்சித். அப்பகுதி மக்களின் வட்டார மொழி, உடல்மொழி என பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததாம். தவிர, அனுபவ நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்த அனுபவமும் தம்மை உற்சாகப்படுத்தியதாகச் சொல்லும் துஷாரா, தமிழகத்தின் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்தவர்.
"என்புகைப்படம் ஒன்றைப் பார்த்துள்ளார் ரஞ்சித் சார். இதையடுத்து அவரது உதவியாளர் தொடர்பு கொண்டார். நேரில் சந்தித்தபோது 'சார்பட்டா' கதையை இருபது நிமிடங்களுக்கு விவரித்தார். நான் அந்தக் கதையில் 'மாரியம்மா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நடிப்பு, ஒப்பனைத் தேர்வுகளுக்குப் பிறகுதான் என்னைத் தேர்வு செய்தார்.
"'கபாலி' படத்தில் அஞ்சலி பட்டீல் ஏற்று நடித்த கதாபாத்திரம் ரசிகர்களுக்கு நினைவிருக்கும். மாரியம்மாவும் அப்படிப்பட்ட ஒரு பெண்தான். மிக தைரியசாலி. சென்னை தமிழில் சொல்ல வேண்டுமானால் 'செம கெத்தான பொண்ணு'. படம் பார்க்கும்போது நான் இப்படிச் சொல்வதற்கான காரணம் புரியும்," என்கிறார் துஷாரா.
வடசென்னை மக்களின் வழக்கமான நடவடிக்கைகள், அவர்களின் நடை, உடை, பாவனைகள், தமிழ் பேசும் விதம் என அனைத்தையும் கவனித்து நடிக்க வேண்டும் என பா.ரஞ்சித் தொடக்கத்திலேயே வலியுறுத்தினாராம். அதனால் அனைத்து வகையிலும் மெனக்கெட்டதாகச் சொல்கிறார்.
"திண்டுக்கல் பெண் என்பதால் சென்னைத் தமிழ் அறவே பழக்கமில்லை. எழுத்தாளர் தமிழ் பிரபாதான் எப்படிப் பேச வேண்டும், உச்சரிப்பு குறித்தெல்லாம் எனக்கு சொல்லிக் கொடுத்தார்.
"முன்னதாக, சில நாள்களுக்கு ஒத்திகை பார்த்தோம். நடிப்புப் பட்டறையின்போது வட சென்னையைச் சேர்ந்த சிலர் நேரில் வந்து பலவற்றைக் கற்றுக் கொடுத்தனர்.
"இதனால் நீளமான வசனங்களைப் பேசுவதும் கூட பின்னர் எளிதாக இருந்தது. வட சென்னை மக்கள் எப்படி உட்காருவார்கள், நிற்பார்கள், சிகைஅலங்காரம் செய்து கொள்வார்கள் என அனைத்துமே இப்போது எனக்கு அத்துப்படி.
"குறுகிய காலத்துக்கு மாரியம்மா என்ற பாத்திரமாகவே மாறிவிட்டேன். காலையில் எழுந்தவுடன் வீட்டு வாசலில் கோலமிடுவது, விறகுகள் கொண்டு சமைப்பது, வீட்டைச் சுத்தப்படுத்துவது என்று எனது சூழ்நிலைக்கு நேர்மாறான வாழ்க்கையை சினிமாவுக்காக வாழ்ந்திருக்கிறேன். இந்த அனுபவம் அலாதியானது.
"நாயகியாகத்தான் நடிப்பேன் என நிபந்தனை விதிக்கமாட்டேன். அதேசமயம் எனது பாத்திரங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்," எனத் தெளிவாகப் பேசுகிறார் துஷாரா.

