ஈழத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது 'ஒற்றைப் பனைமரம்'.
நேரடி வெளியீடு காணாமலேயே இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட அனைத்துலக திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ளது இப்படம்.
அது மட்டுமல்ல, சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறது.
சிறந்த இயக்குநர் விருது பெற்ற 'மண்' பட இயக்குநர் புதியவன் ராசையாவின் இயக்கத்தில் இப்படம் உருவாகி உள்ளது.
"ஈழத்தில் இறுதிப்போர் நடந்தபோது ஏராளமான விஷயங்கள் நடந்தேறின. இப்படம் போர் முடிவுறும் இறுதி நாள்களில் தொடங்கும். சமகாலச் சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும், வார்த்தைகளால் விவரிக்க இயலாத பலவற்றைச் சொல்லப் போகிறோம். தெள்ளத் தெளிவாக நகரும் கதையாக 'ஒற்றைப் பனைமரம்' உருவாகி உள்ளது," என்று சொல்லும் இயக்குநர் புதியவன் ராசையா, இப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்துள்ளார்.
மேலும் நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அஷ்வமித்ரா இசையமைக்க, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பை கவனிக்கிறார்கள். இப்படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.

