அருண் பிரபு: சிவா அண்ணன் அளித்த ஊக்கத்தால் உருவானது 'வாழ்'

அருண் பிரபு: சிவா அண்ணன் அளித்த ஊக்கத்தால் உருவானது 'வாழ்'

2 mins read
7bd3bc74-33fa-45ec-a350-30099fb21500
சிவகார்த்திகேயனுடன் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் (இடது). -

'அருவி' என்ற வெற்­றிப் படத்தை தந்த இயக்­கு­நர் அருண் பிரபு புரு­ஷோத்­த­மன் சுமார் நான்கு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இயக்­கி­உள்ள படம் 'வாழ்'.

அண்­மை­யில் இதை நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யிட்­டுள்­ள­னர். இது சிவ­கார்த்­தி­கே­யன் தயா­ரித்­துள்ள படம் என்ற கூடு­தல் அம்­ச­மும் உள்­ளது.

ஒரு படம் வெற்றி அடைந்­தால், அடுத்­த­டுத்து புதுப்படங்களை இயக்குவதில்­தான் பெரும்­பாலான இயக்­கு­நர்­கள் முனைப்பு காட்­டு­வார்­கள். பெரிய நடி­கர்­களை அணுகி கதை சொல்ல முயற்சி செய்­வார்­கள். ஆனால் அருண் பிரபு புரு­ஷோத்­த­மன் இதற்கு நேர்­மா­றாக உள்­ளார்.

'வாழ்' கதையை கடந்த 2010ஆம் ஆண்­டி­லேயே எழுதி விட்­டா­ராம். ஆனால் அதை திரைப்­ப­ட­மாக உரு­வாக்க தமக்கு பத்­தாண்­டு­கள் ஆகி­விட்­ட­தா­கச் சொல்­கி­றார். ஏன் இவ்­வ­ளவு பெரிய இடை­வெளி என்று கேட்­டால், சரி­யான காலம், நேரத்­துக்­கா­கக் காத்­தி­ருந்­த­தா­கப் பதில் வரு­கிறது.

"இந்­தப் படத்­தின் மூலம் சமூ­கத்­துக்கு என்ன சொல்­லப்­போ­கி­றீர்­கள் என்று கேட்­கி­றார்­கள். 'வாழ்' என்பது படத்­தின் தலைப்பு மட்­டு­மல்ல, நான் சொல்ல வரும் விஷ­ய­மும் அது­தான். அதா­வது உல­கில் பிறந்த அனை­வ­ருமே வாழ வேண்­டும். ஆனால் எப்­படி வாழ்கிறோம் என்பது முக்­கி­யம்.

"தன்­னு­டைய வாழ்க்கை இப்­படித்­தான் இருக்க வேண்­டும் என பல­ரும் கற்­பனை செய்து வைத்­தி­ருப்­பார்­கள். இப்­படி வாழ வேண்­டும், அவ­ரைப் போல் பிர­ப­ல­மாக வேண்­டும் என்று பலர் மெனக்­கெ­டு­கி­றார்­கள். ஆனால் நமக்கு கிடைத்த ஒரு வாழ்க்­கையை வாழ்­வ­தில் ஏன் இவ்­வ­ளவு யோச­னை­கள், திட்­ட­மிடல்­கள் தேவைப்­ப­டு­கின்­றன?

"இந்­தக் கேள்­வியை 'வாழ்' படம் எழுப்­பும். அதே சம­யம் எனது முந்­தைய பட­மான 'அருவி'யைப் போல் இது கன­மான கதை­யம்­சம் கொண்ட படைப்பு அல்ல. எனி­னும் படம் பார்க்­கும் ஒவ்­வொ­ரு­வ­ரும் அதில் இடம்­பெற்­றுள்ள ஏதே­னும் ஒரு கதா­பாத்­தி­ரத்­து­ட­னா­வது தம்­மைப் பொருத்­திக்கொள்ள முடி­யும்," என்­கி­றார் அருண் பிரபு.

'வாழ்' கதையை முதன்­மு­த­லில் நடி­கர் சிவ­கார்த்­தி­கே­ய­னி­டம்­தான் சொன்­னா­ராம். அவர் அளித்த ஊக்­க­மும் இப்­ப­டம் உரு­வாக முக்­கிய கார­ணம் என்­கி­றார்.

"கடந்த 2011ஆம் ஆண்­டி­லேயே சிவா அண்­ணா­வி­டம் கதையை விவ­ரித்து இருந்­தேன். நிறைய புது­முகங்­களை வைத்து இந்­தக் கதையை தயா­ரிக்க வேண்­டும் என்­றால் எந்­த­வொரு தயா­ரிப்­பா­ள­ரும் நிச்­ச­யம் அதி­கம் யோசித்து தயங்­கு­வார். ஆனால் சிவா அண்­ணன் அதை­யெல்­லாம் செய்­ய­வில்லை. நாம் இணைந்து பணி­யாற்றுவோம் என்­றார். அவர் அப்­ப­டிச் சொன்னதுமே எனக்கு நம்­பிக்கை வந்­து­விட்­டது.

"மேலும், 'நீங்­கள் என்ன நினைக்­கி­றீர்­களோ, அதைச் செய்­யுங்­கள். நான் கடை­சி­யா­கப் பார்க்­கி­றேன். நீங்­கள் இப்­போது எது­வுமே சொல்ல வேண்­டாம்' என்று முழு சுதந்­திரம் கொடுத்­தார். ஒரு கட்­டத்­தில் நான்­தான் மிக­வும் தயங்­கி­னேன். ஆனால் அவரோ, எல்­லாமே கச்சித­மாக உள்­ளது என்று சொல்லி அனை­வ­ரை­யும் உற்­சா­கப்­ப­டுத்­தி­னார்," என்­கி­றார் அருண் பிரபு.