சமூக சேவையில் ஈடுபட்டுள்ள பூஜா
அண்மைக்காலமாக சமூக சேவையில் கவனம் செலுத்தி வருகிறார் பூஜா ஹெக்டே.
விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வரும் இவர், அண்மைய பேட்டி ஒன்றில், அன்பு என்பது சக்தி வாய்ந்த ஓர் உணர்ச்சி என்றும் அதன் மூலம் ஒருவர் தமது சமூகத்துக்கு அனைத்தையும் செய்ய முடியும் என்றும் குறிப்பிட் டிருந்தார்.
"இந்தச் சமூகம் எனக்கு எவ்வளவோ கொடுத்து இருக்கிறது. எனது வாழ்க்கையில் நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதற்கு நான் திருப்பிக் கொடுக்கவேண்டும். அதனால்தான் புதிதாக தொண்டு நிறுவனம் தொடங்கி இருக்கிறேன்.
"சிறிய அளவிலோ அல்லது பெரிதாகவோ சமூகத்துக்கு என்னால் முடிந்த உதவிகளைத் தொண்டு நிறுவனம் மூலம் செய்ய இருக்கிறேன். அன்பால் செய்யும் எந்த சேவையாக இருந்தாலும் உலகத்தில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவர காரணமாக அமையும்," என்று பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.
இவரது தொண்டு நிறுவனமானது பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளவர்களுக்கும் நோய்வாய்ப்பட்டுள்ளவர்களுக்கும் மருத்துவ உதவிகளையும் செய்யுமாம்.
ஜப்பானில் அசத்தும் 'தர்பார்'
ரஜினியின் 'தர்பார்' படம் தமிழகத்தில் எவ்வளவு வசூலை அள்ளியது என்பது தெரியவில்லை. ஆனால், ஜப்பானில் அந்தப் படத்தைக் கொண்டாடுகிறார்கள்.
ஜப்பானில் திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வசூல் சாதனை படைத்து வருகிறதாம் 'தர்பார்'
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'தர்பார்' படத்தை மொழி மாற்றம் செய்து, கடந்த வாரம்தான் ஜப்பானில் வெளியிட்டனர். இதையடுத்து அங்குள்ள ரஜினி ரசிகர்கள் திரையரங்குகளுக்குப் படையெடுத்து வருகின்றனர்.
ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நடிகை ஜெயந்தி காலமானார்
பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்தார் ஜெயந்தி. திரைப்படங்களில் நடிப்பதையும் நிறுத்திக் கொண்டார்.
'எதிர்நீச்சல்', 'இரு கோடுகள்', 'பாமா விஜயம்', 'வெள்ளி விழா' உட்பட ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் ஜெயந்தி. மேலும், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவருக்கு கர்நாடகா அரசு பலமுறை சிறந்த நடிகைக்கான விருதுகளை அளித்துள்ளது. மேலும் சில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஆஸ்துமாவுக்காக சிகிச்சை பெற்று வந்தார் ஜெயந்தி. எனினும் உடல்நலக்குறைவால் அவர் காலமானதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

