நந்தினி தேவி வேடத்தில் ஐஸ்வர்யா
'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராய் நந்தினி தேவி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது தெரிய வந்துள்ளது.
இத்தகவலை படத்தின் இயக்குநரோ அல்லது படக்குழுவைச் சேர்ந்த முக்கிய புள்ளியோ வெளியிடவில்லை.
'சேதுபதி', 'மாரி 2' உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ராகவன் முருகன் தான் இந்தத் தகவலை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தில் பாண்டிய இளவரசனாக நடிக்கிறாராம் ராகவன் முருகன். இந்நிலையில், படப்பிடிப்பின்போது தாம் ஐஸ்வர்யா ராயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் தாம் இளவரசனாகவும் ஐஸ்வர்யா நந்தினி தேவியாகவும் நடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படங்களை ஏராளமான ரசிகர்கள் இணையவெளியில் பகிர்ந்து வருகின்றனர்.
சிவாவுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா
'பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயனுடன் இணைய உள்ளார் ராஷ்மிகா மந்தனா.
தெலுங்கு இயக்குநர் அனுதீப்பின் அடுத்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது. இதில் சிவகார்த்திகேயன் நடிப்பதும் அவருக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது என்பதும் தெரிந்த சங்கதிகள்தான்.
இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனாவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிகிறது. இரு மொழிகளில் உருவாகும் படம் என்பதால் அவருக்கும் பெரிய சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருப்பதாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இப்போதே சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

