'ஜெய் பீம்' என்ற தலைப்பே சூர்யாவின் ரசிகர்களை மிடுக்காக நடைபோட வைத்துள்ளது. இணைய வெளியில் இந்தப் படம் குறித்த விவாதங்கள், புது தகவல்கள் பரவலாக காணப்படுகின்றன.
படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியில் வழக்கறிஞருக்கான உடையில் காணப்படுகிறார் சூர்யா. அடிதட்டு மக்கள் வரிசையாக அணிவகுத்து நிற்பதையும் காணமுடிகிறது.
சூர்யா கௌரவ வேடத்தில் நடிக்கிறார். சில காட்சிகளில் மட்டுமே தோன்றுவார் என்ற தகவலை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.
இது முழுக்க சூர்யாவின் படமாகவே உருவாகிறது என தெளிவுபடுத்தி உள்ளார் இயக்குநர் ஞானவேல்.
சினிமா துறையில் காலெடுத்து வைக்கும் அடுத்த ஊடகவியலாளர் இவர். படத்தின் தலைப்பிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என விரும்பியதாகச் சொல்கிறார்.
"இது உணர்வுபூர்வமாக வைக்கப்பட்ட தலைப்பு. அதனால் 'ஜெய் பீம்' என்பது எல்லாச் செயல்பாட்டிற்குமான முழக்கமாகவே பார்க்க வேண்டும். மாறாக, பட்டியலினத்தின் அடையாளமாக மட்டுமே சுருக்கிவிடக் கூடாது.
"ஒரு பழங்குடியினப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் அதற்கு எதிரான சட்டப்போராட்டமும்தான் கதை. உரிமைகள் மறுக்கப்பட்டவர்களின் ஆயுதமாக, அம்பேத்கரின் சிந்தனைகளே என் நினைவுக்கு வருகிறது. அதனால்தான் இந்த தலைப்பை வைத்தோம்," என்கிறார் ஞானவேல்.
சூர்யாவிடம் இந்தத் தலைப்பைச் சொன்னபோது அவர் கொஞ்சம்கூட தயங்காமல், பொருத்தமான தலைப்பு என்றாராம்.
கதைக்கேற்ற தலைப்பாக உள்ளது என்றும் இதை சாதிய அடையாளமாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினாராம்.
'ஜெய் பீம்' என்பது பொதுவெளியில் அனைத்துத் தரப்பு மக்களுக்குமான முழக்கமாகப் பார்க்கப்பட வேண்டும் என்பதே தமது விருப்பம் என்று சொல்லும் ஞானவேல், தமிழில் இதுபோன்ற படங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என விரும்புவதாகச் சொல்கிறார்.
"சூர்யாவைப் பொறுத்தவரை அவர் தயாரிப்பாளராகவே இந்தப் படத்துக்குள் முதலில் வந்தார். பிறகு தமிழகத்தின் முக்கியமான சட்ட ஆளுமைகளில் ஒருவரும் கீழ்த்தட்டு மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவருமான நீதியரசர் சந்துரு குறித்து பேசப்போகும் படம் என்றதும் அவரது ஆர்வம் அதிகரித்தது.
"நாங்கள் வெளியிட்ட 'இவர்தான் சந்துரு' புத்தகம் அவரது பார்வைக்கு வந்ததும், அதை முழுமையாகப் படித்துப் பார்த்தார். இதுபோன்று நம்மால் கொண்டாடப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர் என்ற கூற்றை அவரும் ஏற்றுக் கொண்டார்.
"அர்ப்பணிப்பான மனிதர்களின் வாழ்வு பற்றிய பதிவுகள் நம்மிடம் புத்தகங்களில் இருக்கிறது. கலைப்படைப்பாக இல்லை. அந்தப் பணியை தாம் முன்னெடுக்க வேண்டும் என்ற ஆவலுடன் சூர்யா இந்த முயற்சியில் இணைந்தார்.
"சென்னை உயர் நீதிமன்றத்தின் நடைமுறைகள் குறித்து எந்தப் படமும் முழுமையாக விவரித்ததில்லை. முதன் முறையாக அந்தப் பணியை நாங்கள் செய்திருக்கிறோம்.
''சூர்யா மாதிரியான ஒரு கதாநாயகன் அடித்தட்டு மக்கள் குறித்து பேசும் ஒரு கதையில் நடிக்கும்போது ஒரு மாயாஜாலம் நிகழ்கிறது. வெறுமனே பாடம் நடத்துவதாக இல்லாமல், நல்லதொரு கலைப்படைப்பாக உருவாக்கி இருக்கிறோம். சூர்யா கம்பீரமான நாயகனாக வலம் வருவார்.
"இதில் இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கையும் பேசப்பட்டிருக்கிறது. பழங்குடிச் சமூகமாக இருப்பதால் அவர்கள் மீது பல பொய் வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். சிறுபான்மையினர் என்பதால் அவர்களால் அணிதிரண்டு போராட முடியவில்லை.
"பசிக்கும்போது எலி, அணில், முயல் என்று வேட்டையாடி சாப்பிட்டுவிட்டு, அரிசி ஆலைக்குக் கூலி வேலைக்குப் போய்விடுகிறார்கள். 'சொல்லில் சிறந்த சொல் செயல்' என்பார்கள். அதன்படி வெறும் சொல்லாக இருக்கும் சட்டம் செயலாக மாறும்போதுதான் எல்லாமே பலன் அளிக்கிறது," என்கிறார் இயக்குநர் ஞானவேல்.
மிக விரைவில் சமூக அக்கறையை முன்னிறுத்தி, திரையில் தோன்றிப் பேசப்போகும் வசனங்கள் பெரிய விவாதங்களை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.
, :
சூர்யா

