இயக்குநருக்கு நன்றி கூறும் ரம்யா
'நவரசா' ஆந்தாலஜி படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கதையை பிரியதர்ஷன் இயக்க, ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார்.
லட்சுமி என்ற கதாபாத்திரம் இளமை யிலும் முதுமையிலும் எதிர்கொள்ளும் அனுபவங்கள்தான் கதையாம். இரு தோற்றங்களிலும் தம்மால் முடிந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளதாகச் சொல்கிறார் ரம்யா.
"இயக்குநர் என்னிடம் கூறியபோது சற்று குழப்பமாகவும் பயமாகவும் இருந்தது. முதுமையான தோற்றத்தில் சரியாக நடிக்க முடியுமா எனும் தயக்கம் ஏற்பட்டது. ஆனால் பிரியதர்ஷன் சார் ஒவ்வொரு காட்சியையும் மிகப் பொறுமையாக சொல்லிக்கொடுத்து, படப்பிடிப்பில் என்னை இயல்பாக உணர வைத்தார். அவரது வழிகாட்டுதல் இல்லை என்றால் இதுபோன்ற கதைக்களத்தில் நடிப்பது குறித்து யோசித்துக் கூட பார்த்திருக்க மாட்டேன்," என்கிறார் ரம்யா நம்பீசன்.
பாடலாசிரியர் சினேகன் திருமணம்
பாடலாசிரியர் சினேகன், சின்னத்திரை நடிகை கன்னிகா ரவியின் திருமணம் சென்னையில் நடைபெற்றது.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நடத்தி வைத்த இத்திருமணத்தில் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பல வெற்றிப் படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்களை எழுதியுள்ள சினேகன் அரசியல், சினிமா என இரு துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக தேர்தலிலும் போட்டியிட்டுளார்.
'தேவராட்டம்' படத்தில் நடித்துள்ள நடிகை கன்னிகா ரவிக்கும் சினேகனுக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார் கன்னிகா.
பார்வையற்ற பெண்ணாக நயன்தாரா
நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள 'நெற்றிக்கண்' திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
'அவள்' பட இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கி உள்ள இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார் நயன்தாரா. இது முழுநீள திகில் படமாம்.
தமது ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் இணைந்து தயாரித்துள்ளனர். தொடர் கொலைகளைச் செய்யும் ஒரு சமூக விரோதியை பார்வையற்ற ஓர் இளம்பெண் கண்டுபிடிப்பதுதான் கதை.
ஆகஸ்ட் 13ஆம் தேதி நேரடியாக இணையத்தில் வெளியிடப்படும் இப்படத்தின் முன்னோட்ட காட்சித் தொகுப்பிலேயே நயன்தாராவின் நடிப்பு அசத்தலாக உள்ளது என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், ரவுடி பிக்சர்ஸ் சார்பாக மேலும் இரண்டு படங்களை தங்களது திருமணத்துக்கு முன்பு தயாரிக்க நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, இளையர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளனராம்.

