வில்லனாக மிரட்டி, குணச்சித்திர வேடங்களில் கவனம் ஈர்த்து, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமாகி இருப்பவர் பசுபதி.
ஆனால் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் ஏற்று நடித்த ரங்கன் கதாபாத்திரம் தனது திரை வாழ்க்கையில் மிக முக்கியமானது என்றும் தன் மனதுக்கு நெருக்கமானது என்றும் கூறியுள்ளார்.
இந்தப் படத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பசுபதி. அவருடைய நடிப்பு மிக இயல்பாகவும் கச்சிதமாகவும் இருந்ததாக விமர்சகர்களும் ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.
இந்நிலையில், தாம் சமூக வலைத்தளத்தில் இயங்கவில்லை என்பதைக் குறிப்பிட்டு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பசுபதி, தம்மை பாராட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற திரை ரசிகர்கள் கொண்டாடுகிற படமாக 'சார்பட்டா பரம்பரை' வெற்றிபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"சென்னையின் வாழ்வியலையும் குத்துச்சண்டையையும் களமாகக் கொண்ட யதார்த்தமான படைப்பைப் பார்த்து அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள். தான் எடுத்துக்கொண்ட கதையை, சொல் நேர்த்தி, செயல் நேர்த்தியுடன் படைப்பதில் வித்தகர் ரஞ்சித். ரங்கன் வாத்தியாராக என்னைச் செதுக்கியதற்கு அவருக்கு என் நன்றிகள் பல. என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன், நெருக்கமானவன்.
"நண்பர் ஆர்யாவுடன் நடித்ததில் என்னிடம் மேலும் பெருமை சேர்ந்துகொள்கிறது. என்னுடன் நடித்த அனைத்துக் கலைஞர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள். 22 ஆண்டுகள் என்னுடைய திரைப் பயணத்தில் என்னுடன் பயணம் செய்த அனைவருக்கும் நன்றி," என்று பசுபதி கூறியுள்ளார்.

