திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read

மீண்டும் தமிழில் சாய் பல்லவி

மீண்டும் தமிழ்ப் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளார் சாய் பல்லவி. கடைசியாக அவர் நடித்த தமிழ்ப் படம் 'என்ஜிகே'. அதன் பிறகு மாயமாகி விட்டார்.

இடைப்பட்ட காலத்தில் தெலுங்கு, மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வந்த சாய் பல்லவிக்கு தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லையாம். மற்றொரு பக்கம் கொரோனா விவகாரமும் சேர்ந்துகொள்ள, கிடைத்த வாய்ப்புகளை மறுக்காமல் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அந்த வகையில், தெலுங்கில் நாக சைதன்யாவுடன் 'லவ் ஸ்டோரி', ராணாவுடன் 'விராட பருவம்', நானியுடன் 'ஷியாம் ஷிங்க ராய்' ஆகிய மூன்று படங்கள் கைவசம் உள்ளன. மேலும், பவன் கல்யாணுடன் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோடம்பாக்கத்துக்கு வந்துள்ளார் சாய் பல்லவி. கதாநாயகியை மையமாக வைத்து தயாராகும் படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். முன்னணி தயாரிப்பு நிறுவனம் அவரை ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் விக்ராந்த், விதார்த் நடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தனுஷ் படத்தில் மூன்று நாயகிகள்

தனுஷ் நடிக்கும் 45ஆவது படத்தை 'மித்ரன்' ஜவஹர் இயக்குவது தெரிந்த விஷயம்.

இப்படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது. இத்தகவலை படத் தயாரிப்புத் தரப்பு மறுக்கவில்லை.

இந்நிலையில் இப்படத்துக்காக ராஷி கண்ணாவும் பிரியா பவானி சங்கரும் ஒப்பந்தமாகி உள்ளனர். மிக விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டிருப்பதை அடுத்து, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கு முன்பு தனுஷை வைத்து 'குட்டி', 'யாரடி நீ மோகினி', 'உத்தம புத்திரன்' ஆகிய படங்களை இயக்கி உள்ளார் ஜவஹர்.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷின் 'டி-43' உருவாகி வருகிறது. அதையடுத்து தனது சகோதரர் செல்வ ராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ்.

இதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கும்போதே ஜவஹர் இயக்கும் படத்துக்கான படப்பிடிப்பையும் தொடங்க வேண்டும் என்பதுதான் தனுஷின் திட்டமாம்.