தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தை மையப்படுத்தியும் வெளிவரும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் குறித்து வேதனையை வெளிப்படுத்தி உள்ளார் காலஞ்சென்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண்.
சொந்தமாக திரைப்படங்கள் தயாரித்ததன் மூலம் தன் தந்தை சேர்த்து வைத்த சொத்துகளை தாம் அழித்துவிட்டதாகக் கூறப்படுவதை அவர் மறுத்துள்ளார்.
"நான் சில படங்களைத் தயாரித்தது அனைவருக்கும் தெரியும். அவை அனைத்துமே தரமான படைப்புகள். விமர்சன ரீதியில் பாராட்டுகள் கிடைத்தபோதும் எனக்கு லாபம் கிடைக்கவில்லை.
"இயக்குநர் சமுத்திரக்கனி சொன்ன கதை பிடித்துப்போய் 'உன்னை சரணடைந்தேன்' படத்தை தயாரித்தேன். அதற்கு மாநில அரசு விருது கிடைத்தது. ஆனால் லாபம் வரவில்லை.
"தெலுங்கில் வந்த 'வர்ஷம்' படத்தை தமிழில் அதிக பணம் செலவு செய்து 'மழை' என்ற பெயரில் எடுத்தோம். அதில் முதலீடு செய்த மொத்த பணமும் போய்விட்டது. அப்போது கூட அப்பா நஷ்டம் என்பது எல்லாத் துறையிலும் ஏற்படக்கூடியது. அதற்காக வருத்தப்படக் கூடாது என்று ஆறுதல் கூறினார்.
"அதன்பிறகு வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 28' படத்தை எடுத்தேன். படம் வெற்றி பெற்றது. ஆனால், எதிர்பார்த்த பணம் வரவில்லை. தொடர்ந்து 'ஆரண்ய காண்டம்' படம் தயாரித்தேன். அது தேசிய விருதுகளைப் பெற்றதால் புகழ் வந்தது. ஆனால் நான் எதிர்பார்த்த லாபம் மட்டும் கிடைக்கவில்லை. இதனால் மன அழுத்தத்துக்கு ஆளானேன்," என்கிறார் எஸ்.பி.பி.சரண்.
இதையடுத்து குடும்பத்துக்கு வருமானம் தந்துகொண்டிருந்த தன் தந்தைக்குச் சொந்தமான கோதண்டபாணி ஸ்டூடியோவிலும் பணிகள் ஏதும் நடக்காதது வேதனை அளித்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், அந்தச் சமயத்தில்தான் குடும்பச் சொத்துகளை தாம் அழித்துவிட்டதாக சிலர் பேசத் தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.
"எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இத்தனை ஆண்டுகளாக சம்பாதித்து வைத்த பணத்தை எல்லாம் அவர் பெற்ற மகனே அழித்து அவரை திவாலாக்கிவிட்டான். எல்லா பணமும் போய்விட்டது. மொத்த சொத்தும் கரைந்துவிட்டது.
"இனிமேல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவ்வளவுதான். பெற்ற மகனே அவர் எங்கு தன் கலை வாழ்க்கையைத் தொடங்கினாரோ, அந்த இடத்துக்கே அவரைக் கொண்டு வந்துள்ளான் என விமர்சித்துப் பேசினர். அதைக் கேட்டு வேதனை அடைந்தேன். ஆனால், அப்போதும்கூட அப்பா, அம்மா ஆதரவாக இருந்தனர். மேடைக் கச்சேரிகள்தான் பொருளாதார ரீதியாக எங்களுக்கு உதவின," என்று சரண் தெரிவித்துள்ளார்.
மீண்டும் பின்னணிப் பாடகராக பயணத்தைத் தொடரலாம் என்று முடிவெடுத்த போதுதான் தந்தையை இழக்க நேரிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இப்போது தொலைக்காட்சியில் ஒளியேறும் இசை தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாகக் கூறியுள்ளார்.
"இனி அந்த நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துவேன். மேலும், என் தந்தை குரலில் பாடவும் முடிவு செய்து இருக்கிறேன்," என்கிறார் எஸ்.பி.பி.சரண்.