கிஷோர் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படம் 'மாயோன்'. தான்யா நாயகியாக நடிக்கிறார்.
முதன்முறையாக இதில் அகழ்வாராய்ச்சியாளர் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் சிபிராஜ். இதற்காக தமது உடல் மொழியை மாற்றிக்கொண்டாராம்.
மேலும், இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக சோர்ந்து போனதாகவும் படக்குழுவைச் சேர்ந்த அனைவருமே நூறு விழுக்காட்டுக்கும் அதிகமான உழைப்பைத் தந்துள்ளதாகவும் அண்மைய பேட்டியில் கூறியுள்ளார்.
"இந்தப் படத்துக்காக நூறு அடி உயர சிலை ஒன்றை உருவாக்க வேண்டியிருந்தது. இந்தக் கடினமான பணியைக் கலை இயக்குநர் தொடங்கிய நிலையில், நாங்கள் படப்பிடிப்புக்காக கிளம்பினோம்.
"புதுக்கோட்டையிலும் கும்பகோணத்திலும் தான் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டன. எனினும், எதிர்பாராத மழையால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனால் புதுக்கோட்டையில் எடுக்க வேண்டிய காட்சிகளைத் திட்டமிட்டபடி எடுக்க முடியவில்லை. அதற்குள் கும்பகோணத்தில் படப்பிடிப்பைத் தொடங்க வேண்டிய நிலை.
"இதனால் தினமும் கும்பகோணத்தில் இருந்து அதிகாலையிலேயே புறப்பட்டு புதுக்கோட்டை செல்வோம். அங்கு சில காட்சிகளைப் படமாக்கி கையோடு கும்பகோணம் வந்துவிடுவோம். பின்னர் அங்கும் படப்பிடிப்பு நீடிக்கும். இப்படி இடைவிடாமல் பயணம் மேற்கொண்டதாலும் படப்பிடிப்பை நடத்தியதாலும் படக்குழுவில் இருந்த அனைவருமே சோர்ந்துவிட்டோம்.
"ஒளிப்பதிவாளர் 'கிரேன்' வாகனத்தில் ஏறி அமர்ந்து காட்சிகளை எடுப்பார். சிறிது நேரம் இடைவெளி கிடைத்தால், 'கிரேனி'ல் அமர்ந்தபடி அந்தரத்திலேயே அவர் தூங்குவதை பலமுறை பார்த்திருக்கிறேன்.
"அகழ்வாராய்ச்சியாளர் என்பதால் எனது தோற்றத்தில் சில மாற்றங்கள் இருப்பது கண்ணுக்குத் தெரியும். அதைவிட முக்கியமாக இந்தப் படத்தில் எனது உடல்மொழியை மாற்ற ஓரளவு மெனக்கெட்டேன். எப்போதும் ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கி இருப்பது போன்றும் அறிவாற்றல் நிறைந்த இளைஞனாகவும் காட்சியளிப்பேன்.
"அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருள்கள் குறித்து நான் சில காட்சிகளில் பேச வேண்டி இருந்தது. இதனால் படப்பிடிப்புக்கு முந்தைய நாளே என்னென்ன பொருள்கள் குறித்துப் பேச வேண்டும் எனக் கேட்டுக்கொள்வேன்.
"பின்னர் வாள், கேடயம் உள்ளிட்ட அந்தப் பொருள்களை ஒருமுறை நேரில் பார்த்துவிடுவேன். இதன் மூலம் அவற்றை என் கையில் வைத்துக்கொண்டு வசனங்களைப் பேசும்போது அவை எனக்கு முன்பே தெரிந்த பொருள்கள் என்ற உணர்வுடன் இயல்பாக நடிக்க முடிந்தது," என்கிறார் சிபிராஜ்.
கதாநாயகி தான்யா குறித்து?
"நல்ல நடிகை. குறிப்பிட்ட ஒரு காட்சியில் நான் சில நிமிடங்கள் நீடிக்கும் வசனங்களைப் பேச வேண்டி இருந்தது. அதற்காக மிகவும் சிரமப்பட்டு அவற்றை மனப்பாடம் செய்திருந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் காட்சியை மாற்றி விட்டனர். தான்யா அந்த வசனங்களைப் பேசுவார் என்பதை அறிந்தேன். இப்படி கடைசி நேரத்தில் சொன்னபோதிலும், அந்த வசனங்களை சிறப்பாகப் பேசி நடித்தார் தான்யா," என்கிறார் சிபிராஜ்.

