தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரைத் துளிகள்

3 mins read
bb4fe0f7-fe98-44b4-9819-2715f716f579
-
multi-img1 of 3

நாயகியான குழந்தை நட்சத்திரம்

அஜித் ரசிகர்களுக்கு அனிகாவை ரொம்பப் பிடிக்கும். 'என்னை அறிந்தால்' படத்தில் திரிஷாவின் மகளாக நடித்தவர். பின்னர் 'விஸ்வாசம்' படத்தில் அஜித்தின் மகளாக நடித்து இருந்தார்.

ஜெயலலிதா வாழ்க்கை கதையாக வெளியான 'குயின்' இணையத்தொடரில் இளம் வயது ஜெயலலிதா வாக நடித்த அனிகாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் இப்போது வளர்ந்து ஆளாகிவிட்டார். அண்மையில் தமது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் அனிகா. சினிமாவில் கதாநாயகியாக நடிக்க அவர் வாய்ப்பு தேடுவதாகக் கூறப்பட்டது.

இப்போது அப்படியோர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மலையாளத்தில் வெற்றி பெற்ற 'கப்பேலா' படத்தை தெலுங்கில் மறுபதிப்பு செய்ய உள்ளனர். இதில் அனிகாதான் நாயகி. அடுத்து தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதுதான் தமது இலக்கு என்று சொல்லும் அனிகாவை இன்ஸ்டகிராமில் 1.4 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.

உருவ கேலி: கண்டிக்கும் ஷாலினி

ஜி.வி.பிரகாஷுடன் '100 சதவீத காதல்', ஜீவாவுடன் 'கொரில்லா', இந்தியில் இரு படங்கள் என இடைவிடாமல் படப்பிடிப்புகளில் பங்கேற்கி றார் ஷாலினி பாண்டே.

'அர்ஜுன் ரெட்டி' தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக அறிமுகமான ஷாலினி அச்சமயம் சற்றே உடல் பெருத்து காணப்பட்டார். அதை வைத்து இப்போது தம்மை கிண்டல் செய்வதாக ஆதங்கப்படுகிறார் ஷாலினி.

"நான் நடித்த படம் வெற்றிபெற்ற பிறகும் எனது நடிப்பு பாராட்டப்பட்ட போதும் என்னைக் கேலி செய்தனர். உடல் பருமன் காரணமாகத்தான் எனக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரவில்லை என்று சிலர் கதை பரப்பினர். குண்டாக இருக்கிறார், வயிறு சரியில்ல. கால் ஒரு மாதிரி இருக்கிறது என்றெல்லாம் சினிமாவில் நடிக்கும் கதாநாயகிகளை அதிகமாக கேலி செய்கிறார்கள்," என்கிறார் ஷாலினி.

இதனால் பல நடிகைகள் வருத்தத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இவ்வாறு உருவ கேலி செய்வது சரியல்ல என்கிறார்.

"உடல் வாகு எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை கதைக்கு தேவை என்றால் உடல் எடையைக் கூட்டவும் குறைக்கவும் செய்வேன். இப்போதுகூட இந்தி படத்தில் நடனக் கலைஞராக நடிக்க எடை குறைந்துள்ளேன். மற்றவர்கள் என்னை கேலி செய்ததற்காக அவ்வாறு செய்யவில்லை," என்கிறார் ஷாலினி.

நிவேதா: கவர்ச்சியை விரும்புகிறேன்

"இன்னும் எத்தனை நாள் கவர்ச்சி காட்டாமல் நடிப்பது. ஒன்றிரண்டு படங்களில் இளம் ரசிகர்களைக் கிறங்கடிக்கும் வகையில் நடிக்கப் போகிறேன்," என்கிறார் நிவேதா பெத்துராஜ்.

சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கி வரும் நடிகைகளில் இவரும் ஒருவர். அண்மைய பேட்டி ஒன்றில் தொடர்ந்து சீரியசான கதாபாத்திரங்களில் நடிப்பது தம்மை சோர்வடைய வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

"இயல்பாகவே நான் குறும்புத்தனம் உள்ள பெண். அப்படிப்பட்ட வேடங்கள் அமைந்தால் என்னால் இயல்பாக நடிக்க முடியும். மேலும், எனது கவர்ச்சிப் பக்கத்தை வெளிப்படுத்தக் கூடிய பாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். இத்தகைய கதைகளுடன் வரும் இயக்குநர்கள் கூடுதல் கால்ஷீட் கேட்டால், அதற்கு நான் தயார்," என்கிறார் நிவேதா.

இளம் நடிகை என்று குறிப்பிடப்படும்போதே கவர்ச்சியில் பெயரெடுக்க வேண்டும் என்றும் காலம் கடந்த பிறகு கவர்ச்சி காட்ட முன்வந்தால் வரவேற்பு இருக்காது என்றும் சொல்கிறார்.